யாழில் விசேட சுற்றிவளைப்பில் 62 பேர் கைது!! -180 பொலிஸார் களத்தில்- - Yarl Thinakkural

யாழில் விசேட சுற்றிவளைப்பில் 62 பேர் கைது!! -180 பொலிஸார் களத்தில்-


யாழ். பிராந்திய பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில் சுற்றிவளைப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை யாழ் பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றன.

இந்த சுற்றிவளைப்பு தேடுதலின் போது குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 9 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் 13 பேரும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 40 மில்லி லீட்டர் கசிப்பினை உடமையில் வைத்திருந்த குற்றத்தில் ஒருவரும், 300 மில்லி லீட்டர் தடைசெய்யப்பட்ட சாராயம் வைத்திருந்த குற்றத்தில் ஒருவரும், ஆயிரத்து 579 கிராம் கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றத்தில் பெண் ஒருவரும், 3 ஆயிரத்து 320 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றத்தில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ் பிராந்திய பகுதிகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 13 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் மது போதையில் சாரத்தித்தியம் செய்த 15 சாரதிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பு கைது நடவடிக்கையில் யாழ் பிராந்தியத்தில் 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் போக்குவரத்து விதி முறைகளை மீறிய குற்றத்தில் 39 பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 180 க்கும் மேற்பட்ட பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post