செம்மணி படுகொலையின் 24 ஆவது நினைவேந்தல்!! -இன்று அனுஸ்ரிப்பு- - Yarl Thinakkural

செம்மணி படுகொலையின் 24 ஆவது நினைவேந்தல்!! -இன்று அனுஸ்ரிப்பு-


யாழ்.செம்மணி பகுதியில் இருந்த இராணுவ முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாணவி குமாரசாமி கிருசாந்தியின் உட்பட அங்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் 24ஆவது ஆண்டு நினைவு தினம்; இன்று திங்கட்கிழமை அனுஸ்ரிக்கப்பட்டது. 

1996ஆம் செப்ரெம்பர் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தி கழுத்தை நெரித்துப் படுகொலை செய்திருந்தனர்.


செம்மணி இராணுவ முகாமில் கிருசாந்தியை தடுத்து வைத்திருந்ததை ஊரவர்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனும், யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 ) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்த வேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்தனர்.


அதேவேளை யாழ்ப்பாணத்தில் அக்கால பகுதியில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 600 பேருக்கும் அதிகமானவர்கள் செம்மணி வயல் வெளிகளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post