முன்னணியின் கூட்டம் குழம்ப காரணம் என்ன? -கட்சி முரண்பாட்டால் ஆவா குழு மீது பழி- - Yarl Thinakkural

முன்னணியின் கூட்டம் குழம்ப காரணம் என்ன? -கட்சி முரண்பாட்டால் ஆவா குழு மீது பழி-

யாழ்.இனுவில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அண்மையில் நடத்திய கூட்டமொன்று, ஆவா குழுவின் மிரட்டலால் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த கூட்டம் ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டதாக கட்சி அறிவித்திருந்தது. 

இருப்பினும் அக் கூட்டம் குறித்த கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் புறக்கணிக்கப்பட்டு நடத்தப்பட்டதாலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 3 நாட்களின் முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட ருவிற்றர் பதிவு ஒன்றில், தமது கூட்டம் ஆவா குழு மற்றும் இராணுவ புலனாய்வாளர்களால் குழப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கதிரைகளை அடித்து உடைத்ததாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த ருவிற்றர் பதிவினை அடிப்படையாக கொண்டு யாழ்.தினக்குரல் உள்ளிட்ட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

இருப்பினும் அந்த ருவிற்றர் பதிவில் வெளியிடப்பட்ட தகவல் தொடர்பில் தற்போது கேள்வி எழுந்துள்ளது. 

அன்றைய கூட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது?
இனுவில் பகுதியை சேர்ந்த பலர் கட்சியின் வேட்பாளர் வி.மணிவண்ணனுடன் இணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தனர். 

இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடான அந்த கூட்டத்தில் மணிவண்ணனை வருகைதராததற்கான காரணம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். 

ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில் வழங்காததை அடுத்து, அங்கிருந்தவர்கள் தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். 
இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆவா குழு அங்கு வந்து தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. 

இந்த தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுடன் சம்பவ தினத்திற்கு மறுநாள் யாழ்.தினக்குரல் தொடர்பு கொண்டு வினாவியிருந்தது. 

இதன் போது அவர் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது உண்மைதான், ஆனால் ஆவா குழு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதுவும் உறுதியாக தெரியவில்லை. 

அந்த கூட்டத்தை வேறு ஒருவர்தான் ஏற்பாடு செய்திருந்தார். 

அவரிடம் தகவல்களை கேட்டுவிட்டு, மீண்டும் உங்களுடன் தொடர்பு கொண்டு உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை கூறுகின்றேன் என்றார். 

இருப்பினும் இன்றுவரை அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் செயலாளரால் எமக்கு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post