நல்லூர் விசேட திருவிழாக்களில் அதிக பக்தர்கள் கூடினால் ஆபத்து!! -சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை- - Yarl Thinakkural

நல்லூர் விசேட திருவிழாக்களில் அதிக பக்தர்கள் கூடினால் ஆபத்து!! -சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை-

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் எதிர்வரும்  நாட்களில்  இடம்பெறவுள்ள விசேட திருவிழாக்களின் போது அதிகளவான பக்தர்கள் கூடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில்  கோவிட்-19 தொற்று நோய் தொடர்பான கரிசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.


உரிய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் திருவிழாவில் ஒன்று கூடுவது ஆபத்துக்கு வழிவகுக்கலாம் என்பதால்  இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் பொறுப்பு வாய்ந்தவர்களை கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.

சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் விசேட அனுமதியுடன் நல்லூர் திருவிழாவில்  300 பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முக கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல் கட்டாயம் எனவும்  அறிவுறுத்தப்பட்டது.

திருவிழா ஆரம்பம் முதல் ஆலய  நிர்வாகம், சபையின் சுகாதார ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் மற்றும் தொண்டர்கள் இணைந்து சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையற்ற கூட்டங்களைத் தடுக்கும் முன்னேற்பாடாக வியாபார நடவடிக்கைள் உள்ளிட்டவை தடுக்கப்பட்டுள்ளன.

எனினும் அடுத்த சில நாட்களில் முக்கிய திருவிழாக்கள் இடம்பெறவுள்ளதால் ஆலயத்துக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதிகளவு பக்தர்கள் ஒன்றுகூடினால் அவர்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இவ்வாறு அதிகமான பக்தர்கள் வருமிடத்து  சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுவது சாத்தியமற்றது. அத்துடன் பெரும் கூட்டங்கள் அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

கோயிலுக்கு பக்தர்களை முறையற்ற வகையில் னுமதிப்பது ஆபத்தாக அமையலாம் என சுகாதாரத் துறையினர் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

30.07.2020 திகதியிட்ட கடிதத்தில் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறினால் திருவிழா இரத்து செய்யப்படலாம்  என சுகாதார சேவைகளின் பணிப்பாளர்  முன்னர் எழுதிய கடிதம் ஒன்றில்  தெரிவித்துள்ளதையும் அவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, தொற்று நோய் பரவலைக் கருத்தில் கொண்டு சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்துக்குள் கூடாதிருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து திருவிழா  சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும்  சுகாதாரத்  துறை சார்ந்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு நல்லூரில்   அடுத்துவரும் விசேட திருவிழாக்களில் பக்தர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? எனக் கேட்டபோது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் பதிலளித்தார். 

Post a Comment

Previous Post Next Post