தலைமையை ஏற்க தயார்!! -சிறிதரன் அறிவிப்பு- - Yarl Thinakkural

தலைமையை ஏற்க தயார்!! -சிறிதரன் அறிவிப்பு-

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள தான் தயாராக உள்ளேன் என்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்குத் தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. இன்னுமொரு தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. 

தமிழரசுக் கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அது உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. தேர்தல் முடிவுகளை வைத்து தலைமைகளை மாற்ற வேண்டும் எனக் கூறுவது பொருத்தமற்றது.

தமிழரசுக் கட்சியில் இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எனக்கு தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. 

அனைத்து உறுப்பினர்களும்,மக்களும் இணைந்து ஒருமித்துக் கோரினால் அந்தத் தலைமையை ஏற்க நான் தயாராகவே உள்ளேன். அனைவரினதும் சம்மதத்துடனேயே அன்றி, இன்னொருவரது பதவியைப் பறித்து அதில் அமர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்றார்.

Post a Comment

Previous Post Next Post