காணாமல் போனோர் தினத்தில் பெரும் போராட்டம்!! -வட,கிழக்கில் எழுச்சியுடன் நடத்த முடிவு- - Yarl Thinakkural

காணாமல் போனோர் தினத்தில் பெரும் போராட்டம்!! -வட,கிழக்கில் எழுச்சியுடன் நடத்த முடிவு-

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களை தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஏதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை நடத்த தீர்மானித்துள்ளோம். 

வடக்கு மாகாணத்திற்கான போராட்டம் யாழ்.மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திற்கான பேராட்டம் மட்டக்களப்பிலும் நடத்தப்படவுள்ளது.

யாழ்.பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக 30 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு நடக்கவிருக்கும் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மான்னார் மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றினைய உள்ளனர்.

அன்று பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்படும் ஆர்ப்பாட்டம் பேரணியாக மாற்றப்பட்ட ஆஸ்பத்திரி வீதி ஊடாக யாழ்.மாவட்டச் செயலகத்தினை சென்றடைய உள்ளது.

இதே போல் கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்துவார்கள்.
இப் போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள், கிராம மட்ட அமைப்புக்கள், அரச சாற்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை நலிவடையச் செய்து. நசுக்குகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல முனைகளில் இருந்து நிதிப்பலத்தினையும், ஆட்பலத்தினையும் கொண்டு இந்த போராட்டங்களை வேறு வழிகளில் கொண்டு செல்வதற்கு முனைந்து வருகின்றார்கள்.

இதன் ஊடாக அரசாங்கத்திற்கு சார்பான விடயங்களை செய்துவிடலாம் என்றும் சிலர் நினைக்கின்றார்கள். எமது உறவுகளுக்கான இந்த போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டவரின் கடைசித்தாய் தாய் இருக்கும்வரை முழுவீச்சில் இந்த போராட்டம் தொடரும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post