இனப்படுகொலை விவகாரம்!! -முன்னணியுடன் இணைய விக்கி பச்சைக்கொடி- - Yarl Thinakkural

இனப்படுகொலை விவகாரம்!! -முன்னணியுடன் இணைய விக்கி பச்சைக்கொடி-

தமிழ் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்படும் எந்தக் கட்சியுடனும் ஒத்துழைத்து செயற்படுவதற்கு நாம் தயாரா இருக்கின்றோம் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

அவர் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி – பதில் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 
அவ்வறிக்கை வருமாறு:-

கேள்வி:- நீங்கள் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கு தயார் என்று சொன்னதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியிருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறதே. அது உண்மையா?

பதில்:- அப்படி நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. சில தினங்களுக்கு முன்னர் நான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பின்வருமாறுதான் கூறியிருந்தேன்.

எமது இனத்தின் நன்மை கருதி, தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. இதற்கு ஒத்துழைப்பு வழங்க நானும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருக்கின்றோம்.

இங்கு நான் அழுத்தம் திருத்தமாக கொள்கை அடிப்படையில் என்று குறிப்பிட்டிருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கை என்னவென்று குறிப்பிடவேண்டும். 

இணைந்த வடக்கு - கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டித் தீர்வு தரப்பட வேண்டும். இன்றேல் இறுதித் தீர்வு தொடர்பில் சர்வதேச மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பும் அதன் அடிப்படையில் செயற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இங்கு நடந்த இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். 

இந்த விடயங்களில் இதய சுத்தியுடன் செயற்படும் எந்தக் கட்சியுடனும் ஒத்துழைத்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராக இருக்கின்றது.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றது. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுபற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடாதுவிட்டாலும், அதில் வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது இதுபற்றி வலியுறுத்தி இருந்தார்கள். 

ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும். தமது செயலில்களில் நம்பிக்கை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகளை செய்யவேண்டும். அதை செல்வம் முதலில் செய்யட்டும் என்றுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post