வடமராட்சி கடலட்டை விவகாரம்!! -சுமந்திரனின் மனு தள்ளுபடி- - Yarl Thinakkural

வடமராட்சி கடலட்டை விவகாரம்!! -சுமந்திரனின் மனு தள்ளுபடி-

வடமராட்சி கடலில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பருத்தித்துறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மனு மீதான விசாரணை இன்று செவ்வாய்கிழமை காலை நடந்த போதே அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் குறித்த மனு செய்யப்பட்டது.

தடை உத்தரவை கடந்த வருடம் பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை எதிர்த்து மீண்டும் கடந்த மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த மனு விண்ணப்பம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்பினரது சமர்ப்பணங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கட்டளை இன்று செவ்வாய் கிழமை ஓகஸ்ட் 4 ஆம் திகதி வழங்கப்படும் என்று நீதிமன்றம் திகதியிட்டது. 

இதன்படி குறித்த வழக்கு இன்று மீண்டும் கட்டளைக்காக பருத்தித்துறை நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடற்தொழில் பிணக்குத் தொடர்பில் தீர்த்து வைக்கும் அதிகாரம் முழுமையாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு உண்டு.

மேலும் வடமராட்சியைச் சேர்ந்த 3 சங்கங்கள் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபட அனுமதியை வழங்கியுள்ளன.

அத்தோடு நீதிமன்றக் கட்டளையை மீறி தொழில் இடம்பெறுவது தொடர்பில் விசாரணைகள் சாட்சியங்கள் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லை  என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், மனு விண்ணப்பத்தை நிராகரித்தது.

Post a Comment

Previous Post Next Post