மணிக்கு பதவி கொடுத்தால் ஆபத்து!! -சூம் மீட்டிங்கில் கர்சித்த கஜேந்திரகுமார்- - Yarl Thinakkural

மணிக்கு பதவி கொடுத்தால் ஆபத்து!! -சூம் மீட்டிங்கில் கர்சித்த கஜேந்திரகுமார்-

தனக்கென ஒரு அணியை உருவாக்கி, கட்சியின் கொள்கைக்கு மாறாக செயற்பட்ட மணிவண்ணனுக்கு பதவியை வழங்குவது ஆபத்தானது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களுடன் காணொளி கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

மணிவண்ணன் தொடர்பில் நாங்கள் 3 மணி நேரம் தொடர்ந்து விவாதித்தோம். தமிழ்த் தேசிய முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களில் 3 பேர் மணிவண்ணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள். 

ஏனையவர்கள் மணிவண்ணனை கட்சியில் இருந்து நீக்கலாம் என்பதற்கு அப்பால் அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பேசியிருந்தார்கள்.

எமது கட்சியைப் பொறுத்தவரையில் எந்த விடயமானாலும் எம்மிடையே பேசித் தான் முடிவெடுக்கிறோம். நான் ஒரு கருத்தை முன்வைக்கும் போது அதை கண்ணை மூடிக்கொண்டு கட்சியில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எங்கள் கட்சி இல்லை.

கட்சியின் முடிவை கட்சிக்குள்ளேயே விமர்சித்து கட்சிக்குள் ஒரு அணியை உருவாக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. மணிவண்ணன் அந்தக் கோணத்தில் செயற்பட்டது தான் எங்களுக்குப் பிரச்சினை.

விருப்பு வாக்குப் பிரச்சினை இல்லை. சுகாஸ்க்கும் மணிவண்ணனுக்கும் விருப்பு வாக்கு விடயத்தில் பிரச்சினைகள் இருந்தது உண்மை.

மணிவண்ணன் கூறுகிறார் தன்னுடைய வளர்ச்சி கஜேந்திரனுக்கு போட்டியாக உள்ளதால்தான் தனக்கு எதிரான பரப்புரைகளை செய்கிறார் என்று.

மணிவண்ணனுக்கும் சுகாஸ்க்கும் 800 விருப்பு வாக்குகள் தான் வித்தியாசம். அப்படி என்றால் கஜன் சுகாஸ்க்கு எதிராகவும் கதைத்திருக்க வேண்டும்.

மணிவண்ணன் கஜேந்திரனுக்கும் சுகாஸ்க்கும் எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு, தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவது தான் தேர்தல் காலத்தில் இடம்பெற்றது.

நேற்று முன்தினம் கோப்பாய் பிரதேசத்தில் கஜனும் நானும் தன்னுடைய வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத நிலையில் தனக்கு எதிரான நடவடிக்கையை எடுகின்றார்கள் என்ற விடயத்தை இங்கு நடந்த கூட்டத்தில் மணி பேசியிருக்கின்றார்.

தேசிய அமைப்பாளர் என்ற பதவியை வைத்துக்கொண்டு கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி, கொள்கைக்கு மாறாக தனக்கொரு அணியை பலம் சேர்க்கிற நிலையில் அவருக்கு இப்பதவியை தொடர்ந்து வழங்குவது ஆபத்தானது.

மணிவண்ணனுக்கு கட்சியில் இனி பதவியினை வழங்க முடியாது. ஆனால் அவர் தொடர்ந்தும் உறுப்பினராக இருக்க முடியும். 

அவர் எதிர்காலத்தில் கட்சியில் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே எமது முடிவுகள் இருக்கும் என்றார். 

Post a Comment

Previous Post Next Post