தமிழ் தேசிய அரங்கில் நாங்கள் மட்டுமே மாற்று அணி!! -சுகாஸ் சிறப்பு பேட்டி- - Yarl Thinakkural

தமிழ் தேசிய அரங்கில் நாங்கள் மட்டுமே மாற்று அணி!! -சுகாஸ் சிறப்பு பேட்டி-

தேர்தலில் தமிழ் மக்கள் இடும் ஒவ்வொரு புள்ளடியும் ஈழத்திற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த ஒப்பற்ற புனிதர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதி கோரும் ஆணைக்காக புள்ளடியாக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி க.சுகாஸ் கோரியுள்ளார்.

தமிழ் இனப்படுகொலை என்றும் மிகப் பெரும் அவலத்தை சிங்கள அரசை பாதுகாப்பதற்காக யுத்தக் குற்றம் என்ற போர்கவையில் முடக்கி வைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்த தேர்தலில் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்.தினக்குதலுக்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலிலேயே மேற்படி விடயத்தினை தெரிவித்துள்ளார். நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று அணி என்னும் பேச்சு, தமிழ் தேசிய அரங்கில் பிரதான பேசு பொருளாக உள்ளது. மாற்று அணி என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் உரிமை கோரும் நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான் மாற்று அணி என்பதை இந்த தேர்தலில் நிலை நிறுத்தப்படும் என்று கருதுகிறீர்களா?

பதில்:- நிச்சயமாக தமிழ் தேசிய அரங்கில் நாங்கள் மட்டுமே மாற்று அணியாக இருக்கின்றோம். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. த.தே.கூ மாற்றாக ஒரு அணி வர வேண்டும் என்றால், அந்த மாற்று என்பது கொள்கையின் அடிப்படையிலான மாற்று அணியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, தேர்தலை மையமாக கொண்ட அணிகள் எல்லாம் மாற்று அணிகள் கிடையாது.

2010 ஆம் ஆண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மாற்று அணி என்ற கோசத்தை முன்வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அன்று த.தே.கூ என்பது எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அதை கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தத்திற்குள் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற இணங்குவதற்கு சம்மதித்ததால்தான் தமிழ் இனத்தை த.தே.கூவிடம் இருந்து காப்பாற்றுவதற்கு, அக் கட்சியில் இருந்து வெளியேறி கடந்த 10 ஆண்டுகளாக கரைபடியாத கொள்கையின்பால் நேர்மையான பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பது கொள்கை அடிப்படையிலான அணி இல்லை. அதனை அவர்களின் பங்காளி கட்சியினுடைய தலைவி என்று சொல்லும் அனந்தி சசிதரன் தமது கூட்டு கொள்கைக்கான கூட்டு இல்லை என்றும், தேர்தலுக்கான கூட்டே இது என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஆகவே த.தே.கூவிற்கான மாற்று அணி என்றால் அது கொள்கைக்காக செயற்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான். தேர்தலுக்காக கூட்டு சேர்ந்தவர்கள் எல்லாம் மாற்று அணி ஆகிவிட முடியாது. விக்னேஸ்வரனின் அணி ஏமாற்று அணி.

கடந்த உள்ளுராட்ச மன்ற தேர்தலில் வட,கிழக்கில் 85 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி வளர்ந்துள்ளது.

இம்முறை பொது தேர்தலில் தமிழ் மக்களின் அதிக வாக்குகளை பெற்று தேசியத்திற்கு தலைமை தாங்கும் ஒரு சக்தியாக தமிழ் தேசிய மக்கள் திகழும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கேள்வி:- உங்கள் கட்சி மீது எதிர்மறைகான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக நீங்கள் செயற்பாட்டு அரசியலுக்கு அப்பால், உணர்ச்சி அரசியலை தமிழ் சமூகத்தில் முன்னெடுத்து வருவதாக கூறப்படுவது தொடர்பில்.

பதில்:- அப்படியான ஒரு குற்றச்சாட்டை இந்த கேள்வியை என்னிடத்தில் இப்போது கேட்பதற்கு முன்னர் நான் அறிந்திருக்கவில்லை. இவ்வாறான கருத்து இருக்கின்றதோ இல்லையோ? இந்த கேள்விக்கு நான் நிச்சையமாக பதில் கூற வேண்டும்.

உணர்வு மிக்கவர்களால்தான் தமிழ் தேசியம் தொடர்பான உணர்ச்சியான அரசியலை செய்ய முடியும். தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்க வேண்டும். தமிழ் மண் மீது பற்று இருக்க வேண்டும். எங்கே தமிழ் உணர்வும், மண் மீதான பற்றும் இருக்கின்றதோ அங்கே உணர்ச்சி இருப்பது தவிர்க்க முடியாதது.

ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உணர்ச்சி அரசிலைய மட்டும் முன்னெடுக்கின்ற ஒரு தரப்பு கிடையாது. எங்களுடைய பாதை தமிழ் தேசியம் என்கின்ற அறிவு தளத்தின் மீது, தமிழ் மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும், அபிலாசைகளையும் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில், ஒரு சமஸ்ரி அடிப்படையில் செயற்படுகின்ற ஒரு செயற்பாட்டு அரசியல் இயக்கம்.

இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லை. உண்மைகளை சொல்லுகின்ற போது, அது மக்களின் பார்வையில் உணர்வு பூர்வமாணதாகவும், அறிவிவு பூர்வமானதாகவும் படலாம்.

கேள்வி:- அரசியல் அபிலாசைகளுக்கு அப்பால், யுத்தம் முடிவடைந்த 10 ஆண்டுகளில் அடிப்படைய வாழ்வாதாரம் என்பது மிக முக்கிய பிரச்சினைகாள உள்ளது. குறிப்பாக விடுதலைப் போராட்டத்தில் மிக பெரும் பங்காற்றிய முன்னாள் போராளிகள் கூட இன்று அவல வாழ்வினையே வாழ்கின்றார்கள்.

வாழ்வாதார, அபிவிருத்தி கட்டுமானத்துடன் கூடிய தமிழ் தேசிய கொள்கை அரசியலை முன்னெடுத்து செல்வது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன.

பதில்:- நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அடிப்படை தேவைகளை தேவைகளை மட்டும் முன்னிலைப்படுத்தி, தமிழ் மக்களின் அபிலாசைகளை புறக்கணிப்பதை நிராகரிக்கின்றோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்து வந்த 10 ஆண்டுகளில், தமிழ் மக்களின் ஆணை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வடிவில் கிடைத்திருக்காவிட்டாலும், எங்களுடைய சக்திக்கு அப்பால்பட்டு, சொந்த நிதியிலும், புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்பிலும் எங்களால் முடிந்த சேவைகளை தமிழ் மக்களுக்கு செய்துள்ளோம்.

தமிழ் மக்கள் எமக்கு ஆணை தருகின்ற பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தோடு இதுவரை பாராளுமன்ற பிரதிநதித்திவம் பெற்று போலி அரசியல் செய்தவர்களை விட பன்மடங்கு மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவோம்.

பசித்தவனுக்கு மீனை கொடுப்பதை விட, மீன் பிடிப்பதற்கான வலையை கொடுப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் எமது திட்டங்களை நடமுறைப்படுத்துவோம். இதன் போது மாவீரர் குடும்பங்களுக்கும், அங்கங்களை இழந்தவர்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும், பிரதேச பாகுபாடு இன்றி சமத்துவத்தின் அடிப்படையில் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்படும்.

கேள்வி:- நீங்கள் பாராளுமன்றம் சென்றால் எதிர்காலத்தில் அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில், த.தே.கூவோடு இணைந்து செயற்படக்கூடிய சாத்திக்கூறுகள் இருக்குமா?

பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்னணி நபர்களையோ, கட்சிகளையோ தனிப்பட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு அமைப்பு இல்லை. கொள்கையின் அடிப்படையிலேயே ஒருவருடன் அல்லது ஒரு கட்சியடன் சேர்ந்து செயற்படுவதா இல்லையா என்பதை தீர்மானிக்கின்றோம்.

கடந்த காலங்களில் கூட கொள்கை அடிப்படையில் செயற்பட்டிருந்த தருணங்களில் கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்பட்டிருக்கின்றோம். ஆனால் அதே நபர்கள் கொள்கைக்கு எதிரானவர்களாக மாறுகின்ற போது, அவர்களுடன் எமக்கு இருக்கின்ற தொடர்பை தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக தவிர்த்திருக்கின்றோம். இது காலம் காட்டிய வரலாறு.

இந்த வகையில் எதிர்காலத்தில் ஏனைய கட்சிகளின் செயற்பாடுகளும், அவர்களின் கடந்த கால செயற்பாடுகளையும் பொறுத்து அந்தந்த கால சூழ்நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி பொருத்தமான சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சரியான முடிவை எடுக்கும்.

கேள்வி:- உங்களுடைய கட்சி போர்குற்றச்சாட்டு மற்றும் தமிழ் இனப்படுகொலை தொடர்பில் வலுவான குரலை எழுப்பிவருகின்ற சட்சியாக உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றீர்கள்.

குறிப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்து தொடர்பான விடயத்தில் செயற்பாட்டளவில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றீர்கள்?

பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்னவென்றால் இலங்கையில் நடந்தது தனியே போர் குற்றம் இல்லை, இங்கு நடந்தது யுத்த குற்றத்தையும் தாண்டிய தமிழ் இனபடுகொலை என்பதே.

யுத்த குற்றவாளிகள் என்று கூறுவதை விட சட்ட ரீதியாக அவர்களை இனப்படுகொலையாளிகள் என்று கூறுவதுதான் சரியானது. இனப்படுகொலை பரிந்தவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜ.நா போன்ற பன்னாட்டு அவைகளிலே பேச்சளவில் மாத்திரம் செயற்படவில்லை.

செயற்பாட்டளவில், எங்களுடைய முழுமையான பங்களிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் சத்தியக்கடதாசிகள் (சத்தியகூற்று) அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இது ஒரு இராஜதந்திர களமாக இருக்கின்ற காரணத்தினால் அது பற்றிய விடயங்கள் பொருத்தமான நேரத்தில் வெளிப்படுத்தப்படும்.

ஏற்கனவே இதற்கான திட்டங்களை நாங்கள் முன்னகர்த்தி வருகின்றோம். முழு வீச்சாக செயற்படுத்த மக்கள் அங்கிகாரம் எமக்கு தேவையாக உள்ளது.

கேள்வி:- சர்வதேச அரங்கில் சில நாடுகளில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்றத்தில் நியாயாதிக்கத்திற்கு உட்படாத நிலையில் பொது உடன்பாட்டுடன் இந்த வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வகையில் தமிழ் இனப்படுகொலை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஏதேனும் இனங்காணப்பட்டுள்ளதா?

பதில்:- சர்வதேச சட்டமானது ஒரு நாடு ரோம் பிரகடணத்தில் கையெழுத்திடாமல் விட்டாலும், இனப்படுகொலை பாதிக்கப்பட்ட மக்கள் படுகொலை நடந்த நாடுகளில் இருந்து புலனம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு சென்று வசிப்பார்களாக இருந்தால், அவர்கள் வசிக்கின்ற நாடு ரோம் பிரகடணத்தில் கையெழுத்திட்டிருந்தால், அவர்கள் தமக்கு அல்லது தமது இனத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான தீர்வினை ஜ.சி.சி ஊடாக தேடிக் கொள்ள முடியும்.

இது போன்றே மியன்மாரில் பாதிக்கப்பட்ட றோகேம்பிய முஸ்லிம் மக்களின் விடயத்தில் தற்போது வழக்கு தாக்குல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்கள் பல்வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். அதில் பல நாடுகள் ரோம் பிரகடணத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

இதன் ஊடாக இலங்கைளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்த முடியும்.

ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் ஆணையை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட தமிழ் இனப் படுகொலையை, வெறுமனே யுத்த குற்றமாக மலினப்படுத்தி ஜ.நாவிற்குள் முடக்கி வைத்திருக்கின்ற காரணத்தினால் காத்திரமான முன்னெடுப்புக்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கி நகர்த முடியாமல் உள்ளது.

தமிழ் இனப்படுகொலை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளதற்கான முழு பொறுப்பினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழர்களின் அவலங்கள் மீது அரசியல் செய்து, சிங்கள அரசாங்கங்களை பாதுகாக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒட்டுமொத்தமாக நிராகரித்தால் மட்டும் தான் ஜ.நாவில் வெறும் யுத்த குற்றங்களாக முடக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் மீதான தமிழ் இனப்படுகொலை அவலத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கியும், அல்லது குறைந்தபட்சம் விசேட தீர்பாயத்தை நோக்கியும் நகர்த முடியும்.

இதனை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் இந்த தேர்தலில் இடப்போகும் ஒவ்வொரு புள்ளடியும் ஈழத்தமிழர்களுடைய இனப்படுகொலை அவலத்திற்கு ஒரு மீட்சியை தருவதற்கான புள்ளடியாக இருக்க வேண்டும். 

Post a Comment

Previous Post Next Post