அம்பாறை இங்கினியாகல பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட 3 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தன்னுடன் உறங்கிக்கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை அதிகாலை வேளையில் காணாமல் போனதை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் அயலவர்களுடன் பெண் குழந்தையை தேடியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்திருந்தனர்.
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அனைத்து பொலிஸாரும் உசார் நிலையில் வைக்கப்பட்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிலில் சிறுமியை தேடிச் சென்ற போது அருகிலுள்ள வீதியில் சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளதுடன் பின்னர் திடீரென அழுகை சத்தம் நின்றுள்ளது. மீண்டும் அழுகுரல் கேட்டதையடுத்து, தனது மோட்டார் சைக்கிளை இயக்காமல் அவ்வதிகாரி தள்ளிச் சென்றுள்ளார்.
வீதியில் வைத்து திடீரென மோட்டார் சைக்கிளை இயக்கி, மின்விளக்கை ஒளிரவிட்டபோது, சிறுமியை கையில் தூக்கிக்கொண்டு நபர் ஒருவர் நிற்பதைக் கண்டுள்ளார்.
குறித்த நபரை மடக்கிப்பிடித்த பொலிஸ் அதிகாரி சிறுமியை மீட்டுள்ளார். இங்கினியாகல வைத்தியசாலைக்கு அருகில் வைத்து குழந்தையை கடமையில் நின்ற பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கடத்திய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர் சிறுமியின் உறவினர் என்று தெரியவந்துள்ளது.
Post a Comment