சிறிதரனின் சுவரொட்டி ஒட்டவிடாததால் வீடு புகுந்து தாக்குதல்!! -பெண் வைத்தியசாலையில்: உருத்திரபுரத்தில் சம்பவம்- - Yarl Thinakkural

சிறிதரனின் சுவரொட்டி ஒட்டவிடாததால் வீடு புகுந்து தாக்குதல்!! -பெண் வைத்தியசாலையில்: உருத்திரபுரத்தில் சம்பவம்-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறிதரனின் ஆதரவாளர்கள் 3 பேர் கிளிநொச்சி பொலிஸாரினால் நேற்று செவ்வாய்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா தலைமையில் நேற்று உருத்திரபுரம் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறிதரனுக்கான பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதன் போது குறித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் சிவஞானம் சிறிதரனின் பிரச்சார துண்டுப்பிரசுரங்கள் ஒட்டும் நடவடிக்கையும் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது உருத்திரபுரத்திலுள்ள வீடொன்றின் முன்பக்க கதவில் சுவரொட்டியை ஒட்ட முனைந்தனர். இதற்கு குடியிருப்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு அந்த நபர்கள், நாங்கள் அனைத்து வீடுகளிலும் ஒட்டிக்கொண்டு வருகிறோம். உனக்கு மட்டும் தனிச்சட்டமா? இங்கு ஒட்டுவோம் என அடாவடியில் ஈடுபட்டனர்.

இரு தரப்பிற்கும் தர்க்கம் உச்சமாக, தனது வீட்டுக் கதவிலும் சுவரொட்டி ஒட்டினால், அவர்களை தாக்குவேன் என குடியிருப்பாளர் எச்சரித்துள்ளார். 

இதனால் கோபமடைந்த மூவரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குடியிருப்பாளரை தாக்கி, அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர். வீட்டின் சொத்துக்களிற்கும் சேதம் விளைவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த பெண்மணி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்த பொலிஸார் அச் சம்பவத்தை தேர்தல் வன்முறைச் சம்பவம் என்ற வகைக்குள் புதிவு செய்யாமல், சாதாரண குற்றச் வகைக்குள்ளே பதிவு செய்துள்ளனர். 

மேலும் இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர்களால் தேர்தல்கள் கண்காணிப்பு குழுவினரிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி பொலிஸார் உறுதி செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Post a Comment

Previous Post Next Post