தமிழர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க ஆணை வேண்டும்!! -மணிவண்ணன் கோரிக்கை- - Yarl Thinakkural

தமிழர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க ஆணை வேண்டும்!! -மணிவண்ணன் கோரிக்கை-

தமிழ் இனத்திற்கு எதிராக குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். 

குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே எதிர்கால தமிழ் சந்ததி காப்பாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

புளியங்கூடல் பகுதியில் இன்று இன்றைய வியாழக்கிழமை மாலை நடந்த தமிழ் தேசிய மக்கள் முண்ணணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவே நாம் அரசியல் களத்தில் புகுந்தோம். எங்களுடைய மண் பறிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கல்வியும் பறிக்கப்பட்டு வருகின்றது.  

நான் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறும் போது அங்கு 100 வீதம் தமிழ் மாணவர்களே கல்வி கற்றனர். ஆனால் இன்று எத்தனை சிங்கள மாணவர்கள் கற்கின்றார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். 

இன்று கல்வி மட்டுமல்ல எமது கடல் வளங்களும் சிங்களவர்களால் சூரையாடப்படுகின்றது. தமிழ் மொழி அடக்கப்படுகின்றது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக தமிழ் இனத்தையே அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையினையே சிங்கள அரசு செய்து வருகின்றது. 

இந்தநிலையிலே எம் இனத்தின் மீதான அடக்கு முறைகள் ஒடுக்குமுறைகளை இல்லாதாது ஒழிக்கவே எமக்கு அங்கீகாரம் தாருங்கள் என கேட்கிறோம்.

எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின் மீது புரியப்படும் குற்றங்களை தடுக்க முடியும்.

அது மட்டுமின்றி எமது வளங்களை சூறையாடுபவர்களை எம் மண்ணை விட்டு அகற்ற வேண்டும். வடமராட்சி தொடக்கம் மண் கும்பான் வரையில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை எம் மண்ணிலிருந்து அகற்ற வேண்டும்.

எனவே தான் கேட்கிறோம் எம்மினத்தின் மீது குற்றங்களை புரிந்தவர்களையும் , வளங்களை சூறையாடுபவர்களையும் தண்டிக்க வேண்டும் என போராடும் எங்களுடன் நீங்களும் அணி திரள வேண்டும் என கேட்கிறோம். குற்றவாளிகளை தண்டிக்க எங்களுக்கு அங்கீகாரத்தை தந்து எம்முடன் அணி திரண்டு வாருங்கள் என தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post