விடுதலை போராட்டத்தை அழித்தது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே!! -மார் தட்டும் தமிழ் வேட்பாளர்- - Yarl Thinakkural

விடுதலை போராட்டத்தை அழித்தது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே!! -மார் தட்டும் தமிழ் வேட்பாளர்-

தமிழீழ விடுதலைப் புலிகளையும், விடுதலைப் போராட்டத்தையும் இல்லாமல் அழித்ததில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு நேரடி பங்களிப்பு உள்ளது என்று அக் கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் விண்ணன் என்று அழைக்கப்படும் பரநிருபசிங்கம் வரதராஜசிங்கம் ஒப்புக் கொண்டுள்ளார்.

அழித்தவர்களிடம் நியாயம் கேட்பதே சிறந்தது என்ற அடிப்படையிலேயே அந்த கட்சி சார்பில் தான் தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. 

இதன் போது கருத்து தெரிவித்த அவர்:- தமிழீழ விடுதலைப் புலிகளையும், விடுதலைப் போராட்டத்தையும் நரி தந்திரத்தின் ஊடாக ஜக்கிய தேசிய கட்சி அழித்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேரடியாகவே செயற்பட்டு வருகின்றது என்றார். 

இதன் போது அங்கிருந்த ஊடகவியலாளர்களால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விடுதலைப் போராட்டத்தை நேரடியாக அழித்தது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். 

இதற்கு பதிலளித்த அவர்:- ஆம். விடுதலைப் புலிகளை அழித்ததில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேரடியாக செயற்பட்டது. ஒரு பொருளை நாங்கள் எங்கு தொலைத்தோமோ அங்குதான் அந்த பொருளை தேட வேண்டும். 

இதனால்தான் அழித்தவர்களிடமே நியாயம் கேட்கவும், எமக்கு தர வேண்டியதை கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் அதே கட்சியில் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். 

நான் இவ்வாறு சொல்லுவதால் கட்சிக்குள் எனக்கு எதிரான கருத்துக்களோ, நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்பட்டால் அதை பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. 

உண்மைகைள சொல்லியே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். எனது எதிர்பார்ப்பு என்னவென்றால் தமிழ் மக்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு புது முகங்களை அனுப்ப வேண்டும். பழையவர்களால் எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் நன்கு புரிந்துவிட்டார்கள் என்றார். 

Post a Comment

Previous Post Next Post