“புலிகளுக்கு எதிரான அணியே கூட்டமைப்பானது” தலைவரே உருவாக்கினார்!! -சிறிதரன் பகீர் தகவல்- - Yarl Thinakkural

“புலிகளுக்கு எதிரான அணியே கூட்டமைப்பானது” தலைவரே உருவாக்கினார்!! -சிறிதரன் பகீர் தகவல்-

விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்களை கொண்டு தலைவரால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வானொலி ஒன்றிற்கு அவர் வழங்கி செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

2011 ஆம் ஆண்டுதான் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிரவேசித்தேன். அதற்கு முன்னர் 12 வருடங்கள் ஆசிரியர் பணியில் இணைந்திருந்தேன்.

ஆகவே 2001 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்று தெரியாமல் பெய் செல்ல முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை யார் தொடக்கியது, யார் உருவாக்கியது என்பது தொடர்பில் நாங்கள் பிழையான கருத்தை பரப்ப முடியாது.

ஆனாலும் எனக்கு நம்பிக்கைதரக்கூடிய கருத்துக்கள் சில உள்ளன. குறிப்பாக தராசி சிவராமுடன் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர் இன்று சுவிஸ்நாட்டில் வாழும் இரா துறைரட்ணமே.

அவருக்குத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் அதிகமான பங்கு உள்ளது. அவரோடு இணைந்த மாமனிதர் நடேசன், மாமனிதர் சிவராம் ஆகியோருக்கும் பங்கு உண்டு.

துறைரட்ணம் இங்கு இருந்திருந்தால் அவரும் மாமனிதராகத்தான் போயிருப்பார். அந்த நேரத்தில் அவர் தற்செயலாக வெளிநாடு போயிருந்தார்.

இவர்களைத்தவிர யோசப் பரராசசிங்கம், அவருடைய மருமகமான நிராச் டேவிட்ட கூடி தனது அனுபவத்தின் அடிப்படையில் பல விடயங்களை கூறியுள்ளார்.

அந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பில் வெளியான செய்திகளை நான் பத்திரிகைகளில் படித்திள்ளேன்.

நான் அறிந்தவரை அந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவு இல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கப்பட முடியாது. இது மிக தெளிவானது. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர் தின உரையில் சொல்லுகின்றார் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எங்களுடைய ஒரு பகுதியான முன்னிறுத்துகின்றோம் என்று.

எங்களுடைய அரசியல் பயணத்தில் ஒரு அங்கிகாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் முன் கொண்டு செல்கின்றோம். ஒரு பக்கத்தில் ஆயுதவழியான போராட்டம் நடக்கின்ற போது, இன்னுமொரு பக்கத்தில் அரசியலில் உலக சூழலை வெற்றி கொள்வதற்கான தேவை உள்ளது.

இதற்காக யார்யார் எங்களுக்கு எதிராக வேலைசெய்தார்களோ? யார் யார் எங்களை அழிக்க முயன்றார்களோ? யார் யார் எங்களுடைய போராட்டத்தை காட்டிக்கொடுத்தார்களோ? அவர்களை இணைத்து பயணிக்கும் சூழலை தலைவர் பிரபாகரன் முன்னெடுத்திருந்தார். இதை மாவீரர் தின உரையில் வெளிப்படையாக தலைவர் சொல்லியுள்ளார் என்றார். 

Post a Comment

Previous Post Next Post