பதவியை தூக்கி எறிந்த குருபரன்!! -இராஜினாமா கடித்தை அனுப்பிவைத்தார்- - Yarl Thinakkural

பதவியை தூக்கி எறிந்த குருபரன்!! -இராஜினாமா கடித்தை அனுப்பிவைத்தார்-

சட்டத்தரணியாக செயற்பட தடை விதித்ததை அடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அவர் இவ் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளதாகப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக பேரவை அவரை சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்துள்ளமையை காரணமாகக் காட்டியே அவர் பதவி விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுக் கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத் தன்மை இல்லாதிருக்கத் தான் அனுமதிக்கப் போவதில்லை என்று தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குருபரன் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறை அனுபவம் இல்லாத ஓர் சட்ட ஆசிரியராகத் தான் கடமையாற்றுவது இயலாத விடயமென்றும் தனது சட்டத் தொழில் மூலம்தான் செய்து வந்த சமூக பங்களிப்பும் ஊடாட்டமும் தனது ஆசிரியப் பணியில் இணை பிரியா அங்கம் என்றும் அது இல்லாத சட்ட ஆசிரியர் பணியில் தனக்கு ஈடுபடுவது திருப்தியைத் தர மாட்டாது என்றும் கலாநிதி குருபரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post