“தமிழ் தேசியம் எங்கள் உயிர்” விட்டுக்கொடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!! -வி.மணிவண்ணன் பேட்டி- - Yarl Thinakkural

“தமிழ் தேசியம் எங்கள் உயிர்” விட்டுக்கொடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!! -வி.மணிவண்ணன் பேட்டி-

கடந்த காலத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளாத தரப்புகளை எதிர்வரும் தேர்தலில் மக்கள் நிராகரிக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியன் தேசிய அமைப்பாளரும்,  யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரியுள்ளார்.

அத்துடன் தேர்தலில் எமக்கான அங்கிகாரத்தை மக்கள் தர வேண்டுமென கேட்டுள்ள அவர் கொள்கை நிலைப்பாட்டில் நேர்மையாகவும், விட்டுக்கொடுப்பின்றி நாம் செயற்படுவதால் குறிப்பாக இளையோர் எங்களுடன் கைகோர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
யாழ்.தினக்குரல் பத்திரிகைக்கு அவர் வழங்கிய விசே நேர்காணல் வருமாறு

கேள்வி:- இந்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

பதில்:- முக்கியமாக 3 விடயங்களுக்கான அங்கிகாரத்திற்காகவே இந்த தேர்தில் எமக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கின்றேன். 70 வருடமாக உள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி வேண்டியும், வீழ்ந்து போயுள்ள கல்வி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எமது கட்சி போராடி வருகின்றது.

இவற்றை மேலும் வலுவான நிலையில் முன்கொண்டு செல்வதற்கு மக்களின் அங்கிகாரம் எமக்கு தேவை.

மேலும் கடந்த காலங்களில் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், இன அழிப்பிற்கு நீதி கோரி இராஜதந்திரிகளுடன் பேசிய போதெல்லாம் எமக்கு தமிழ் மக்கள் அங்கிகாரம் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ற கருத்தினை இராஜதந்திரகள் எமக்கு தெரிவித்தனர்.

சர்வதேச இராஜதந்திரகளுடனும் தமிழ் மக்களின் உரிமையாளர்கள் என்ற ரீதியில் மேற்படி விடயங்கள் தொடர்பில் பேசுவதற்கு தமிழ் மக்களின் அங்கிகாரம் எமக்கு தேவை. இதனாலேயே இந்த தேர்தலில் நாங்கள் போராடுகின்றோம்.

கேள்வி:- ஜனாதிபதி தேர்தல், வடக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்த நீங்கள் ஏன் பாராளுமன்றம் மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்;களில் மட்டும் பங்கு கொள்கின்றீர்கள்?

பதில்:- ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் நலன்சார்ந்த சில கோரிக்கைகளை எமது கட்சி சார்பில் முன்வைத்திருந்தோம். அந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் தரப்பிற்கு ஆதரவு வழங்கலாம் என்ற நிலைப்பாட்டினை எடுத்திருந்தோம்.

இருப்பினும் தமிழ் மக்கள் நலன்சார்ந்த கோரிக்கைகளை எந்த பிரதான வேட்பாளர்களின் தரப்பினர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால்தான் வாக்களிக்க தேவை இல்லை என்று நாங்கள் சிந்தித்திருப்போம்.

மாகாண சபைத் தேர்தல் என்பது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டுவரப்பட்ட ஒரு முறையாகும். அந்த முறையை நிராகரித்துதான் 1978 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டுவரையான யுத்தம் நடைபெற்றது.

மாகாண சபை முறையை தமிழர்கள் தரப்பு ஒட்டுமொத்தமாக நிராகரித்திருந்தது. ஆரம்பத்தில் அனைத்து ஆயுத அமைப்புக்களும் நிராகரித்திருந்தன. தமிழர் விடுதலை கூட்டணியும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றது.

ஆனால் அந்த முறைமையை ஏற்றுக் கொண்ட ஒரே தரப்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு இருந்தது. இதன்படி இணைந்த வடக்கு கிழக்கை மாகாண சபையை கைப்பற்றி பின்னர் வரதராஜபெருமாள் கூட தமிழீழ பிரகடணம் செய்து விட்டு, மாகாண சபைகளில் அதிகாரங்கள் எதுவும் இல்லை, இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிச் சென்றார்.

யுத்தம் முடியும்வரைக்கும் தமிழர் தரப்பு மாகாண சபை தேர்தலில் பங்கு பற்றவும் இல்லை. இதன் காரமாண மாகாண சபையில் போட்டியிடுவது தவறு என்ற அடிப்படையை கொண்டிருந்தோம்.

விடுதலை போராட்டம் முடிந்த பின்னர் மாகாண சபை தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் அதற்கு அங்கிகாரம் கொடுக்கப்பட்டுவிடும் என்பதாலேயே அத்தேர்தலையும் புறக்கணித்திருந்தோம்.

இத் தேர்தலை புற்கணிக்குமாறு அனைத்து தரப்பினர்களிடமும் நாங்கள் கோரியிருந்தோம். ஈ.பி.டி.பி போன்ற பிழையான தரப்புகள் அதை கைப்பற்றினால் மாகாண சபையில் எல்லாம் இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள் என்ற கருத்து அப்போது முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில்தான் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாண சபை முறையையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, பிழையான தரப்பு அதை பைப்பற்றி மாகாண சபை முறை இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது என்று சொல்லக்கூடிய நிலை ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளவே நாங்கள் அதில் போட்டியிடுகின்றோம் என்பதை உள்ளடக்குமாறு கோரியிருந்தோம்.
இவ்வாறான கருத்து கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டால் நாங்கள் கூட அதை ஆதரிப்போம் என்று மன்னார் ஆஜர் ராஜப்பு ஜோசம் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்திருந்தோம்.

ஆனால் அந்த நிபந்தனையை கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள மறுத்திருந்தது. இதனால் அந்த தேர்தலையும் நாங்கள் புறக்கணித்திருந்தோம். இருப்பினும் எதிர்வரும் காலங்களில் மாகாண சபை தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்.
எமத தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேற்படி நியாயப்பாடுகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபையை கற்பற்றி, அதில் ஒன்றும் இல்லை. தமிழ் மக்களுக்கான தீர்வாக மாகாண சபை முறைமையை கொள்ள முடியாது என்பதை வெளிப்படுத்துவோம்.

கேள்வி:- இம்முறை தேர்தலில் தென்னிலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள கட்சிகளின் அதிகளவில் போட்டியிடுகின்றார்கள். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- அரசாங்க கட்சிகள் பிளவுபட்டு இந்த தேர்தலில் போட்டியிடுவது என்பது தமிழ் மக்கள் சாதகமான விடயமாகும். குறிப்பாக 5 ற்கு மேற்பட்ட தரப்பாக தென்னிலங்கை கட்சிகள் பிரிந்திருப்பது என்பது அவர்களின் வாக்குகளை சிதற செய்யும்.

இது தமிழ் தேசிய அரசியலுக்கு மிகவும் சாதகமான அம்சமாகதான் நான் பார்க்கின்றேன்.

கேள்வி:- நீங்கள் ஒரு இளம் வேட்பாளர் என்ற ரீதியில், இளையுர் யுவதிகளுக்கு எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளீர்கள்:-

பதில்:- இளைஞர்கள், யுவதிகள் எமது கட்சியை நோக்கி பெருவாரியாக அணிதிரள்கின்றார்கள். குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்களில் எமது கட்சி உறுப்பினர்களாக ஆற்றல் மிக்க இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

எமது கொள்கை நிலைப்பாட்டில் நேர்மையாகவும், விட்டுக்கொடுப்பின்றி செயற்பாடுவதாலேயே இளையோர் எங்களுடன் கைகோர்க்கின்றார்கள்.

எங்களுடன் இணையும், இன்னும் இணையவிருக்கும் இளையோர்களுக்கு ஓர் செய்தியை நான் சொல்ல விரும்புகின்றேன். குறிப்பாக இளைஞர் யுவதிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு என்பவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான காத்திரமான நடவடிக்கையினை எமது கட்சி நிச்சயமாக எடுக்கும்.

கேள்வி:- யுத்தக் குற்றம், இனப்படுகொலை என்பவற்றை நிரூபிக்க கூடிய ஆதாரங்கள் இல்லை என்ற கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் உங்களுடைய கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

பதில்:- யுத்தக்குற்றம், இனப்படுகொலை தொடர்பாக ஏராளமாக ஆதாரங்கள் உள்ள. அத்தனை ஆதாரங்களையும் திரட்டித்தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஏற்கனவே ஜ.நா மனித உரிமை பேரவைக்கு பதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து சத்திய கூற்றினை பெற்று (சத்திய கடதாசி) அனுப்பிவைத்துள்ளோம்.

அதிகளவிலான பொது மக்கள் தமது உயிர் ஆபத்துக்களையும் மீறி தாமாக முன்வைத்து இனப்படுகொலை தொடர்பான சத்திய கூற்றினை எமக்கு வழங்கியிருந்தார்கள்.

இதைவிட வெளிநாட்டில் உத்தியோகபற்றற்ற டப்ளின், பேமன் என்ற இரண்டு தீர்பாயங்கள் நடந்திருந்தன. இவற்றில் சர்வதேச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் அந்த வழக்கை விசாரித்தார்கள்.

இதற்கு யுத்தத்தின் முடிவில் முள்ளிவய்க்காலில் இருந்து வந்த ஏராளமாக மக்கள் சாட்சியமளித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் இறுதியான தீர்ப்பில் இங்கு இன அழிப்பு நடைபெற்றிருக்கின்றது என்று சொல்லப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றங்களில்  நீதிபதிகளாக இருந்தவர்களே இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடந்தது என்பதை செல்லியுள்ளார்கள். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யுத்த குற்றம், இன அழிப்பு நடைபெற்றதற்கு சான்றுகள் இல்லை என்று கூறுவது அவர்களின் இரகசிய நிகழ்ச்சி நிரலை அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான அவர்களின் நிகழ்ச்சி நிரலை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

கேள்வி:- தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் அதிகளவில் யுத்த குற்றம், தமிழ் இன அழிப்பு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அரசாங்கத்தை நிறுத்துவது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.

இனப்படுகொலையை நிரூபிப்பதற்கோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றமிழைத்தவர்களை முன்னிறுத்துவதற்கு நீங்கள் முன்னெடுத்த நடவடிக்கை என்ன?

பதில்:- தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சிகளிடம் இருந்து சத்தியக் கூற்றுக்களை பெற்று ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருந்தோம். இறுதி யுத்தத்தில் நடந்த படுகொலைகள், யுத்தக்குற்ற மீறல் தொடர்பான காணெலிகள், புகைப்படங்களும் ஜ.நாவிற்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சனல்4 நிறுவனம் கொலைக்களம் என்ற தொணிப்பொருளில் காணொலி தொகுப்பு ஒன்றினையும் ஜ.நாவில் திரையிட்டிருந்தது. சான்றுகள் அதிகமாகவே அனுப்பப்பட்டுள்ள. எங்களாலும் ஏராளமான சான்றுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் 2015 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் தமிழ் மக்களிடம் கையெழுத்து பெற்று ஜ.நாவிற்கு அனுப்பிவைத்துள்ளோம்.

இராஜதந்திரிகளின் சந்திப்புக்களிலும் இனஅழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை தெளிவாக வலியுறுத்தி வருகின்றோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிக தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

கேள்வி:- தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளிடம் விவாதம் ஒன்று நடத்தவிருந்த நிலையில், அந்த விவாத நிகழ்ச்சி தடைப்பட்டுள்ளது. இதற்கு திமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அச்சம்தான் காரணம் என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறான விவாதங்களில் கலந்து கொள்வது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?

பதில்:- தமிழ் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தும் கட்சிகளுக்குத்தான் இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு இடம்பெற்றது என்பது வேடிக்கையாக உள்ளது. கூட்டமைப்பினர் தமிழ் தேசியத்தை கைவிட்டு மிக நீண்ட காலமாகிவிட்டது.

சுமந்திரனுடான விவாதத்தில் கஜேந்திரகுமார் பல தடவை விவாதித்துள்ளார். அந்த விவாதங்களில் எல்லாம் சுமந்திரன் தன்னுடைய கருத்தினை நியாயப்படுத்த முடியாமல் திணறியிருந்தார்.

தொடர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் விவாதித்து தோல்வியடைந்தவரிடம் மீண்டும் மீண்டும் விவாதித்து பலனில்லை. அது சலிப்புத்தன்மையை ஏற்படுத்தும் என்பதனால்தான் அந்த விவாதத்தை கஜேந்திரகுமார் தவிர்த்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விவாதத்திற்கு வருவாராக இருந்தால் எமது கட்சி தலைவரும் விவாதத்திற்கு வர தயாராக உள்ளார். எமது கட்சி தகுதிவாய்ந்த எத்தகைய நேரடி விவாதத்திற்கும் தயாராக உள்ளது.

கேள்வி:- தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் விருப்பு வாக்கிற்கான போட்டி வேட்பாளர்களுக்கு இடையில் நடப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இது தொடர்பில்?

பதில்:- கட்சிக்குள் விருப்பு வாக்குக்கான போட்டி நடைபெறுவதாக? இல்லையா? என்பதற்கு அப்பால் இந்த தேர்தல் முறைமையை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரையில் இந்த தேர்தல் முறைமையை நான் வெறுக்கின்றேன்.

எமது கட்சிக்குள் விருப்பு வாக்குக்கான போட்டி வேட்பாளர்களிடையே நடைபெறுவதான தகவல் பிற கட்சி ஆதரவாளர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் ஒரு செய்தியாகும்.
எமது கட்சியின் 10 வேட்பாளர்களும் ஒரு மித்தே செயற்படுகின்றோம். நாங்கள் ஆராக்கியமாகவே இணைந்து செயற்படுகிறோம்.

இந்த தேர்தல் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப்பட வேண்டிய தேர்தலாகும். தமிழ் மக்களின் அரசியலில் புதிய சிந்தனை, செயற்பாடுகளை கொண்டுவர வேண்டிய தேர்தல் களமாக இது இருக்கின்றது.

இவ்வளவு காலமும் தமிழ் மக்களால் தெரிவு செய்ப்பட்டு, மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளாத தரப்புகளை இந்த தேர்தலில் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

கடந்த 10 வருடங்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சலுகைகளுக்கு விலை போகாது கொள்கைப்பற்றோடு செயற்பட்டுவரும் அமைப்பாகும். எமக்கான அங்கிகாரத்தை தமிழ் மக்கள் தர வேண்டும் என்று அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

Post a Comment

Previous Post Next Post