சிறுநீரக நோயாளிகளை மோசம் செய்யும் அரசு!! -கொடுப்பனவில் பாரபட்சம்: -உமாசந்திர பிரகாஸ்- - Yarl Thinakkural

சிறுநீரக நோயாளிகளை மோசம் செய்யும் அரசு!! -கொடுப்பனவில் பாரபட்சம்: -உமாசந்திர பிரகாஸ்-

வடக்கு மாகாணத்தில் உள்ள சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாவட்டங்களுக்கு இடையில் பெரும் வித்தியம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் உமா சந்திரா பிரகாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று செவ்வாய் கிழமை முற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யுத்தத்தின் பின்னர் குறிப்பிடத்தக்களவானவர்கள் சிறுநீரக, இருதய மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கிளிநொச்சியில் சிறுநீரக நோயாளியொருவரை சந்தித்தேன்.

கிளிநொச்சியில் சிறுநீரக நோயாளிகளிற்கு மாதாந்தம் 1000 ரூபா உதவித் தொகை கிடைப்பதாக தெரிவித்தனர். அது முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் 5,000 ரூபா வழங்கப்படுகிறது. அதை நாம் உறுதி செய்தோம். யாழ்ப்பாணத்தில் 1,000 ரூபா வழங்கப்படுகிறது.

மத்திய அரசிடமிருந்து 5000 ரூபாவும், மாகாண அமைச்சிடமிருந்து 1000 ரூபாவையும் பெறுவதற்கு நோயாளிகள் உரித்துடையவர்கள்.

இந்த நடைமுறை மக்களை சென்று சேர்ந்தள்ளதா? முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் நோயாளர்கள் மத்திய, மாகாண அரசுகளின் கொடுப்பனவை பெற தகுதியுடையவர்கள் என சொல்கிறார்கள்.

அப்படியானால், கிளிநொச்சி, யாழ்ப்பாண நொயாளர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்?
இது தொடர்பாக இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்களுடனும் தொடர்பு கொள்ள முயன்றேன். முடியவில்லை.

முன்பள்ளி ஆசிரியர்களிற்கு 6000 ரூபா வழங்கப்படுகிறது. ஆரம்ப கல்வி சிறப்பாக இருந்தால்தான், மாணவர்களை உயரத்திற்கு கொண்டு செல்லலாம். அந்த ஆசிரியர்கள் சந்தோசமாக இருந்தால்தான் மாணவர்களின் கல்வி சிறக்கும்.

ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? முன்பள்ளி ஆசிரியர்கள் 6000 ரூபாதான் சம்பளம் பெறுகிறார்கள். அவர்களிற்கு சமுர்த்தி கொடுப்பனவு உள்ளிட்ட எந்த கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை.

அதேநேரம், தேர்தல் சமயத்தில் முன்பள்ளி ஆசிரியர்களிற்கு சம்பள அதிகரிப்பு தொடர்பாக பொய்யான வாக்குறுதியளிக்கிறார்கள்.

இவர்களிற்கு சம்பளம் அதிகரிப்பதாக வாக்குறுதியளிப்பவர்கள், அதை எப்படி வழங்கப்பட வேண்டுமென பகிரங்கப்படுத்த வேண்டும். வெறுமனே ஆசரியர்களை ஏமாற்றும் விதமாக வாக்குறுதியளிப்பதை கண்டிக்கிறோம்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கோட்டாபய கூறியிருந்தார், 8ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்றவர்களிற்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். தேர்தல் முடிந்து, நாடாளுமன்ற தேர்தல் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வெறுமனே சுயவிபர கோவைகள் பெறப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் இந்த சந்தர்ப்பத்தில் மக்களிற்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்குவதாக அறிகிறோம்.
இராணுவத்தினர் இந்த செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

வீடுகளிற்கு செல்லும் இராணுவம் உதவித்தொகை பெற்றீர்களா, வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தீர்களா என மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இது தேர்தல் விதிமீறல் என்றார்.

Post a Comment

Previous Post Next Post