பிள்ளைகள் செய்த கொள்ளையை காட்டிக் கொடுத்த தாய்!! - Yarl Thinakkural

பிள்ளைகள் செய்த கொள்ளையை காட்டிக் கொடுத்த தாய்!!

பட்டப் பகலில் வீதியில் சென்றவர்களின் கைப்பேசிகளை பறித்து சென்ற 2 இளைஞர்களை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் 15 ஆம் திகதிய காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதியில் பட்டப்பகலில் வீதியில் தனியாக சென்றவர்களின் பெறுமதியான கைப்பேசிகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பறித்து செல்லப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்து.

அதற்கமைய சுமார் ஒரு மாத காலமாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த கொள்ளையர்கள் கைப்பேசிகளை பறித்து செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டினை கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சியினை அடிப்படையாக கொண்டு இனங்கண்ட பொலிஸார் பாலமுனை பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய உறவு முறை சகோதரர்களை தாயின் உதவியுடன் கைது செய்தனர்.

குறித்த கைது நடவடிக்கைக்கு பொலிஸாருக்கு கைதான சந்தேக நபரின் தாய் ஒருவர் ஒத்துழைப்பு வழங்கியதுடன் கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசிகளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கைதான சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post