இந்திய வியாபாரிக்கு கொரோனா தொற்றா? -உறுதியான தகவல் இல்லை என்கிறார் பாலச்சந்திரன்- - Yarl Thinakkural

இந்திய வியாபாரிக்கு கொரோனா தொற்றா? -உறுதியான தகவல் இல்லை என்கிறார் பாலச்சந்திரன்-

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்று யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து இந்திய தமிழகத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். 

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்க உள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படும் நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா சென்ற போது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத நிலையிலேயே சென்றிருந்தார். 

குறிப்பாக அந்த நபரை யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் ஏற்றப்பட்ட போது உடல் வெம்பநிலை பரிசோதிக்கப்பட்டது, அதே போன்று கொழும்பு துறைமுகத்திற்குள் அவர் பிரவேசித்த போதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது, மேலும் கப்பலில் இருந்த மருத்துவரினாலும் அவருக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. 

மேற்படி 3 பரிசோதனைகளிலும் அவருக்கு வைரஸ் தொற்று அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பின்பே பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டது. 

உடல் வெப்ப பரிசோதனை செய்த போது தொற்றுக்கான அறிகுறி இருந்த வேறு சிலர் பயணத்தை தொடர இடை நிறுத்தப்பட்டார்கள் என்றும் பாலச்சத்திரன் யாழ்.தினக்குரலுக்கு தெரிவித்தார். 
Previous Post Next Post