நீருக்கு அடியில் அருங்காட்சியகம்!! -காலியில் திறந்துவைப்பு- - Yarl Thinakkural

நீருக்கு அடியில் அருங்காட்சியகம்!! -காலியில் திறந்துவைப்பு-

இலங்கையின் நீருக்கடியில் உருவாக்கப்பட்ட முதலாவது அருங்காட்சியகம் காலியில் திறக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை மற்றும் தங்கல்லே ஆகிய இடங்களில் மேலும் இரண்டு நீருக்கடியிலான அருங்காட்சியகங்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி பியால் டி சில்வா, இலங்கையில் காலியில் உள்ள முதல் நீருக்கடியிலான அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்தார்.

கடற்படை உருவாக்கிய பல வடிவமைப்புகள் காலியில் கடற்கரையைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள நீருக்கடியிலான அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இது பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.

அனைத்து நிறுவல்களும் கடற்படைப் பணியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை சீமெந்து மற்றும் இயற்கையான பொருட்களால் அமைக்கப்பட்டுள்ளன.

நீருக்கடியில் உள்ள இந்த அருங்காட்சியகம் கடலில் சுமார் 50 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. அத்துடன், நீந்தக் கூடிய எவரும் எளிதில் பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் ரயில் வண்டிகள் மற்றும் மீன்பிடிக் கப்பல்களைக் காட்சிப்படுத்துவதற்கு முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தாலும், குறுகிய காலத்தில் வண்டிகள் மற்றும் கப்பல்களைச் சேகரிப்பதில் சிரமம் இருந்ததால் கடற்படையினர் பல்வேறு சிலைகள் மற்றும் நினைவுப் பொருட்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை மேற்கொண்டனர்.

இத்திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்றபோதும், மீனவர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறும்வகையில் இப்பகுதியில் மீன் வளர்ப்பு உருவாக்கப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post