மணல் ஏற்றிய வாகனங்கள் மக்களால் முற்றுகை!! -மணல்காட்டில் பதற்றம்: தலையிட்ட சுமந்திரன்- - Yarl Thinakkural

மணல் ஏற்றிய வாகனங்கள் மக்களால் முற்றுகை!! -மணல்காட்டில் பதற்றம்: தலையிட்ட சுமந்திரன்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தனியாருக்கு மணல் அகழ்வு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை மீண்டும் மக்கள் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையினை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலையிட்டதால் நிலமை சுமூகமடைந்தது. 

மணல்காட்டுப் பகுதியில் அப்பிரதேச மக்களுக்கு மணல் அகழ்வுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாடை மீறி தனியாருக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. 

இதனை எதிர்த்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதேச மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தனர். 

இந்நிலையில் பொலிஸார் தலையிட்டதன் அடிப்படையில் 2 நாள் அவகாசம் வழங்கி மக்கள் போராட்டத்தை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் அவகாசம் முடிந்ததை தொடர்ந்து இன்று காலை மக்கள் பெருமளவில் கூடி மணல் அகழ்வை எதிர்த்து போராட்டம் நடத்தியிருந்தனர். 

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் தலையிட்டு மக்களுடன் கலந்துரையாடிய நிலையில் மக்கள் தமது பக்க நியாயத்தை தெரிவித்திருந்தனர். 

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்.மாவட்ட செயலர் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் தமக்கு எதுவும் தெரியாது. என கைவிரித்திருக்கின்றார்கள். 

இந்நிலையில் முன்னாள் யாழ்.மாவட்ட செயலரான கணேசஸ் காலத்தில் மணல் அகழ்வுக்கு எதிராக தம்மால் ஒரு வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் தனியாருக்கு மணல் அகழ்வு அனுமதி வழங்க முடியாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதனடிப்படையில் நாம் நடவடிக்கையில் இறங்குவோம். 

என கூறியதுடன், மணற்காடு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பாரவூர்தி சங்கம் ஆகியவற்றை ஒன்றாக சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்
என உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை 480 கியூப் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரையில் 800 கியூப் மணல் அகழப்பட்டுள்ளமையினை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், 
உடனடியாக மணல் அகழ்வை நிறுத்துமாறு பணித்துள்ளதுடன், இனி மணல் அகழப்பட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post