இனவாத அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் போராட்டம்!! -அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம்: குமார் சங்கக்கார- - Yarl Thinakkural

இனவாத அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் போராட்டம்!! -அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம்: குமார் சங்கக்கார-

இனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது காணப்படும் நிலவரம் குறித்த தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்டமைக்கப்பட்ட இனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு சிறந்த பாடம் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் உணர்வுகளை நாடு தீர்மானிக்க முடியாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அது இலங்கையாகயிருந்தாலும், அமெரிக்காவாகயிருந்தாலும் எங்கள் உணர்வுகள் எவ்வாறானதாக விளங்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது நாடல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

அது என்னுடைய உங்களுடைய தெரிவு என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

மக்களின் விவேகம் ,இரக்கம் பச்சாதாபம் மற்றும் புரிந்துணர்வு போன்றவற்றை ஒரு நாடு தீர்மானிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஏனையவர்களிற்காக மக்களின் இதயங்கள் திறப்பதை நாடொன்றினால் கட்டுப்டுத்த முடியாது அதேபோன்று மக்கள், வேறுபாடுகளையும் அதன் பெறுமானத்தை ஏற்றுக்கொண்டு தழுவுவதையும் கட்டுப்படுத்த முடியாது எனவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

நாங்களே அதனை தெரிவு செய்கின்றோம்,எங்கள் மத்தியிலிருந்து எங்கள் பிரதிநிதிகளை நாங்கள் தெரிவு செய்கின்றோம்,என தெரிவித்துள்ள குமார் சங்ககார எங்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு வழங்கும் குணாதிசயத்திற்கு நாங்களே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

எங்கள் பிரதிநிதிகள் என்ன மாதிரியானவர்கள் என்ன மாதிரியானவர்களாக மாறியுள்ளார்கள் என்பதற்கும்; நாங்களே காரணம் எனவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய இயல்புகளை எங்களுடைய செல்வாக்கே தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் பல தெரிவுகள் அரசாங்கத்தின் மனோபாவங்களை, செயற்பாடுகளை கொள்கைகளை, சட்டமூலங்களை தீர்மானிக்கின்றன என தெரிவித்துள்ள குமார் சங்கக்கார சிறந்த அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கும்,மிகச்சிறந்த சமத்துவமான ஆட்சி முறையை கொண்ட அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் மக்கள் சிறந்தவர்களாகயிருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் பலங்களும் பலவீனங்களும் நாங்கள் நடந்துகொள்ளும் விதத்திலும்,நாங்கள் தெரிவு செய்துள்ள அரசியல்வாதிகள் செயற்படும் விதத்திலும் பிரதிபலிக்கின்றன எனவும் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

எங்களின் இன்றைய தெரிவுகளே நாளை எங்கள் பிள்ளைகள் சுவீகரிக்கப்போகும் கலாச்சாரத்தை தெரிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் வாழ்க்கை குறித்து பெருமிதம் அடையவேண்டும் என்றால் எங்கள் பிள்ளைகள் எங்கள் பாரம்பரியங்களை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதை பார்க்கவேண்டும் என்றால் நாங்கள்சிறந்தவர்களாகயிருப்போம், எனவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post