பொலிஸாருடன் வீடு வீடாக சென்று விபரங்களை திரட்டும் மர்ம நபர்கள்!! -மக்கள் அச்சத்தில்- - Yarl Thinakkural

பொலிஸாருடன் வீடு வீடாக சென்று விபரங்களை திரட்டும் மர்ம நபர்கள்!! -மக்கள் அச்சத்தில்-

கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடு விடாக சென்று மக்களின் விபரங்களை பொலிஸார் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விபரங்கள் திரட்டும் நடவடிக்கையில் போது பொலிஸாருடன் சில மர்ம நபர்களும் மக்களுடைய வீடுகளுக்கு சென்று வருவதாகவும், அவர்களும் சில விபரங்களை மக்களிடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கொழும்பு வாழ் மக்களிடையே ஒரு அச்சமான உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி தகவல்களை வெளியிட்டுள்ள எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. 

மேல்மாகாணத்திற்கான பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் குறித்த விபரங்களை சேகரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை என ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பதிவில் இடம்பெறாதவர்கள் அனைவரும் இந்த பதிவில் இடம்பெறுவார்கள் இது கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்கள்,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள், பாதாள உலக குழுக்களை சேர்ந்தவர்களை இனம் காண்பதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவியாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுமக்கள் வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் என எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளாகள் இந்த தகவல்களை சேகரிக்கின்றனர் என பிட்டக்கோட்டையை சேர்ந்த பத்மசேன திசநாயக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நான் அவர்கள் யார் என கேள்வி எழுப்பியவேளை பொதுமக்கள் குறித்த விபரங்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரே பெற முயல்வதாக தெரிவிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

மே31 ம் திகதி , 24 மணிநேரத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட தகவல்கள் குறித்து அறிவதற்காக மூன்று பொலிஸ்கான்ஸ்டபிள்கள் வந்தனர்,அவர்கள் தாங்கள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்,முன்னைய பதிவிற்கும் தற்போதைய பதிவிற்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் இருப்பதாக ஆராயவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர் எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

நான் அவர்களிற்கு மேலதிக தகவல்களை வழங்கமாட்டேன் என பணிவாக தெரிவித்ததுடன் மக்கள் பல்வேறு துன்பங்களில் சிக்குண்டுள்ள நிலையில் அவர்களை துன்புறுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தேசிய காவல்துறை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் சேகரிப்பதை தடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவுடன் தொடர்புகொண்டவேளை நாங்கள் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் குறித்த விபரங்களையே சேகரிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டதாக எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.

எனினும நிரந்தரமாக வசிப்பவர்களிடமிருந்தும் தகவல்கள் பெறப்படுவதாக தெரிவித்தவேளை பொலிஸ் ஊடகப்பிரிவினர் ஏன் நீங்கள் அந்த தகவல்களை வழங்குகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்கள் என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.

இதேவேளை நுகேகொடவை சேர்ந்த பலர் நிரந்தரமாக வசிப்பவர்களிடமிருந்தும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன,பொலிஸாருடன் வந்த பொதுமக்கள் சிலர் இதனை சேகரித்துள்ளனர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Previous Post Next Post