போராட்டக்காரர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை!! -இராணுவம் களமிறங்கும் என்றும் அறிவிப்பு- - Yarl Thinakkural

போராட்டக்காரர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை!! -இராணுவம் களமிறங்கும் என்றும் அறிவிப்பு-

அமெரிக்காவில் வலுவடையும் போராட்டங்களும், அதில் ஈடுபடுபவர்களால் முன்னெடுக்கப்படும் வன்முறைகளும் உடன் நிறுத்தப்பட வேண்டும். 

இல்லாவிட்டால் இராணுவத்தை களமிறக்கி போராட்டங்களை அடக்குவேன் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

ஜார்ஜ் பிளாய்ட் கருப்பின மனிதனுக்கு நீதி வழங்கப்படும். ஜனாதிபதியாக எனது முதல் மற்றும் மிக உயர்ந்த கடமை நமது பெரிய நாட்டையும் அமெரிக்க மக்களையும் பாதுகாப்பதாகும். நமது தேசத்தின் சட்டங்களை நிலைநிறுத்துவதாக நான் சத்தியம் செய்து உள்ளேன்.அதைத்தான் நான் செய்வேன்.

ஒரு நகரம் அல்லது மாநில நிர்வாகம் தங்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மறுத்தால், நான் அமெரிக்க இராணுவத்தை கொண்டு வருவேன். பிரச்சினையை விரைவாக தீர்ப்பேன் என கூறினார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியதால் பென்டகன் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post