முள்ளிவாய்காலில் புதிதாக முளைத்துள்ள காவலரண்கள்!! -இராணுவம், பொலிஸ் கடமையில்: சி.ஜ.டியும் களத்தில்- - Yarl Thinakkural

முள்ளிவாய்காலில் புதிதாக முளைத்துள்ள காவலரண்கள்!! -இராணுவம், பொலிஸ் கடமையில்: சி.ஜ.டியும் களத்தில்-

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் அதனை குழப்பும் வகையில் குறித்த பகுதியில் புதித பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் காவலரண்களை அமைத்துள்ளனர்.

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதியின் ஆரம்பத்தில், பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடியில் கடந்த 3 நாள்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆள்களில்லாத வீடு ஒன்றில் புலனாய்வாளர்கள் தங்கியிருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு வருபவர்களை இவர்கள் கண்காணிப்பதுடன், ஒளிப்படம் எடுத்து, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அத்துடன், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் தொடக்கமான, இரட்டைவாய்க்கால் பகுதியிலும், இராணுவச் சோதனைசாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடியில் உள்ள படையினர், வீதியால் செல்பவர்களைப் பதிவு செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வட்டுவாகல் பாலத்துக்கு முன்பாக வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான படையினர் நிறுத்தப்பட்டு சோதனைச் சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை, முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையை நினைவு கூரும், நினைவேந்தல் நிகழ்வு கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ள நிலையில், இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகள் அப்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளன
Previous Post Next Post