யாழ் மருத்துவபீட ஆய்வுகூடம் தொடர்பில் விசமப்பிரசாரம்!! -பீடாதிபதி ரவிராஜ்- - Yarl Thinakkural

யாழ் மருத்துவபீட ஆய்வுகூடம் தொடர்பில் விசமப்பிரசாரம்!! -பீடாதிபதி ரவிராஜ்-

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் தொடர்பில் ஒரு சிலர் விசமப் பிரசாரங்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்று மருத்துவபீட பீடாதிபதி வைத்திய கலாநிதி எஸ்.ரவிராஜ் தெரிவித்தார்.

அவர்கள் பரப்பும் வதந்திகள் எந்தவிதத்திலும் ஆய்வுகூட பரிசோதணைகளை பாதிக்காது. தொடர்ந்தும் பாதுகாப்பான முறையில் கொரோனா வைரஸ் தொற்றும் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை மருத்துவபீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்று நண்பகல் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் தொற்று ஏற்பட்டதால் அங்கு நடந்த பி.சி.ஆர் பரிசோதனை இரண்டு நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டது என்று சில செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த செய்திகளில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை. ஆய்வுகூடத்தில் எந்தவிதமான தொற்றும் இல்லை.

சித்திரை மாதம் 2 ஆம் திகதியில் இருந்து அங்கு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டு இடைவெளி இல்லாமல் நேற்று முன்தினம் வரைக்கும் தொடர்ச்சியாக பரிசோதணையை செய்து வந்தோம்.

ஆய்வுகூடத்திற்குள் உள்ளக கட்மைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை இருந்தது. மேலும் ரெம்பிரேச்சர் பார்க்கும் இரு இயந்திரத்தை ஆய்வுகூடத்திற்குள் கொண்டு செல்ல வேண்டிய தேவையும் இருந்தது.

இருப்பினும் தொடர்ச்சியாக பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாலும், வடக்கில் வேறு பரிசோதனை செய்யும் ஆய்வுகூடங்கள் இல்லாத காரணத்தினாலும் பரிசோதனை நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தமுடியாமல் இருந்தது.

இந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மருத்துவபீட ஆய்வுகூட பரிசோதனை இடைநிறுத்தப்பட்டு, உட்கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்தன.

இதைவிடுத்து அந்த ஆய்வுகூடத்தில் தொற்று என்று வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. இந்த வாந்திகள் வெளிவருவதால் மாணவர்கள் ஊழியர்களுடைய அன்றாட செயற்பாடு பாதிக்கப்படும் என்றார்.
Previous Post Next Post