சுமந்திரன் ஈழத்தமிழன் என்று சொல்ல அருகதையற்றவர்!! -சீறும் சிவமோகன்- - Yarl Thinakkural

சுமந்திரன் ஈழத்தமிழன் என்று சொல்ல அருகதையற்றவர்!! -சீறும் சிவமோகன்-

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம் என்று தெரிவித்த வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அதனை மறுப்பவன் ஈழத்தமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவன் என்று தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று செவ்வாய் கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

அகிம்சை அடக்கம் செய்யப்பட்ட நாட்டில் யுத்தம் பலாத்காரமாக திணிக்கப்பட்டது. எனவே ஈழவிடுதலை போராட்டத்தையும் தேசிய தலைவரது அரசியல், ஆயுத போராட்டத்தையும் எவராலும் மறுக்க முடியாது. மறுப்பவர் ஈழதமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவர்.

சுமந்திரனது கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகவே இருந்துவிட்டு போகட்டும். அப்பிடி ஒரு வசனம் தனிப்பட்ட கருத்தாக கூட சுமந்திரனின் வாயில் இருந்து வந்திருக்க கூடாது.

முள்ளிவாய்க்காலில் அடைந்த வேதனையை அனுபவிக்கும் வாரமிது.  வன்னி மண்ணிலே வானிலே குண்டுவீச வங்கறிலே ஒருநாள் கூட படுத்திருக்காதவர்களிற்கு விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை.

குண்டுவீச்சிலே கால்கள் சிதைந்து மயக்கத்திலே இருந்த ஒருவர் முழித்தெழுந்து எங்கே என் கால்கள் என்றுகேட்ட வேதனையும், அதனை அகற்றிய வைத்தியர்கள் அடைந்த வேதனைகளும் இவர்களிற்கு புரியாது.

கூட்டமைப்பு தனி நபர்களின் சொத்து அல்ல. தேசிய தலைவரால் வடிவமைக்கப்பட்டது. அதனை பாதுகாத்து ஒற்றுமையுடன் முன் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.

எங்களுடன் கலந்தாலோசிக்காமல் இப்படியான கருத்துக்களை கூறவேண்டாம் என அவரிடம் நாங்கள் வினயமாக கேட்டுகோள்கிறோம்.

ஒரு கட்சியின் ஊடக அறிவிப்பாளர் ஒருவர் தனது தனிப்பட்ட கருத்தை சொல்லும் போது அது அவரது கட்சிக்கும் பாதிப்பு செலுத்தும்.

எனவே ஒரு கருத்தை சொல்லிவிட்டு தனிப்பட்ட கருத்து என்று சொல்வது அழகாக இருக்காது. அந்த தவறை அவர் விட்டிருக்க கூடாது. ஆயுதப்போராட்டம் கையில் எடுக்கப்படவில்லையாக இருந்தால் ஒட்டுமொத்த தமிழர்களும் அடையாளமே இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள். ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம்.

கூட்டமைப்பின் ஊடகபேச்சாளர் பதவியை மாற்றுவதற்கு பரிந்துரைப்பீர்களா என்று கேட்டதற்கு ஊடகபேச்சாளர் என்ற விடயம் கட்சியால்

தீர்மானிக்கபட வேண்டியது. அந்த சரத்துக்களை சரியாக அவர்கள் பின்பற்றவில்லை என்று உறுதி செய்யப்பட்டால், நீங்கள் சொல்வது போல நடக்கலாம் என்றார்.
Previous Post Next Post