கொரோனா தாக்கம் கற்றுத் தந்த பாடம் - Yarl Thinakkural

கொரோனா தாக்கம் கற்றுத் தந்த பாடம்


உலகலாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கம் இன்று நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்புக்களை சிதைத்து நிலைகுலையச் செய்திருக்கிறது.
ஒவ்வொரு நாடும் அடுத்த கட்டத்துக்குள் நகர்வதற்கான திட்டமிடல்களில் அவசரம் காட்டினாலும் கொரோனாவின் தாக்கமோ நாளுக்கு நாள் மருத்துவத்துறைக்கு சவால் விடும் போக்கே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் கொரோனா தாக்கத்தால் பாரிய பொருளாதார இழப்பினை சந்தித்த இலங்கையும் அதனை ஈடுசெய்வதற்கான முயற்சிகளில் துரிதம் காட்டுகின்றமையே நாட்டினை நாளை முதல் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான திட்டம்.
ஆனாலும் இலங்கையில் கொரோனாவின் தாக்கம் நாம் சந்தோசப்படும் நிலையில் இல்லை என்பதே உண்மை. நேற்றுவரை 847 போ் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில் பல்வேறு பட்ட விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஆனாலும் மக்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதே நாட்டையும் மக்களையும் ஊரடங்குத் தாக்கத்திலிருந்து மீட்பதற்கான வழியென்பதே அரசின் வாதமாக இருப்பினும் தோ்தல் நோக்கியதே அரசின் செயற்பாடுகள் என்ற குற்றச்சாட்டும் இல்லாமலில்லை.
இவ்வாறான நிலையில் கொரோனா தாக்கம் மக்களுக்கு பல்வேறு படிப்பினைகளை விதைத்துச் சென்றிருக்கிறது என்பதே உண்மை.
அவற்றுள் கொரோனாவின் தாக்கம் கொடுத்துப் போன பொருளாதார இழப்பு மனிதர்கள் எல்லோருமே பேதமின்றி வாழ்தலை வௌிப்படுத்திச் சென்றிருக்கிறது. பணக்காரர் ஏழை என்றபேதம் மறந்து எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதற்கப்பால் இதுவரை காலமும் ஆன்மீகம் என்ற பெயரால் அநியாய செலவுகளை செய்து வந்த பல ஆலயங்கள் மக்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களாக மாற்றம் கண்டிருக்கின்றமை பண்டைய ஆலயங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியிருந்தமையினை ஞாபகப்படுத்திச் சென்றிருக்கிறது. ஆலயங்கள் அறப்பணி செய்யும் நிலையங்களாக மாற்றம் கண்டிருக்கின்றமை ஆரோக்கியமானதே.
கொரோனாவின் தாக்கம் ஒவ்வொருவருக்கும் உணர்த்திச் சென்றிருக்கும் ஆழமான விடயம் சுயதொழில் பொருளாதார முன்னேற்றத்தின் அவசியமே. ஓவ்வொருவரும் தமக்கான சுய பொருளாதார உற்பத்தியில் ஈடுபடவேண்டியதன் அவசியத்தை உணர்த்திச் சென்றிருக்கிறது.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வீட்டுத்தோட்டம் இருப்பின் இன்றைய பொருளாதாரத் தக்கத்துக்கு அனைவருமே நிச்சயமாக முகம் கொடுத்திருக்க முடியும்.
ஒட்டு மொத்தத்தில் கொரோனா மக்கள் மத்தியில் மனிதாபிமானத்தை விதைத்துச் சென்றிருக்கின்றமை மனிதர்களை மனிதர்களாக மாறியிருக்கிறது.
ஜெ-ஜெPrevious Post Next Post