தொண்டமானின் பூதவுடல் பாராளுமன்றில்!! -ஜனாதிபதி உள்ளிட்ட பிரமுகர்கள் அஞ்சலித்தவுள்ளனர்- - Yarl Thinakkural

தொண்டமானின் பூதவுடல் பாராளுமன்றில்!! -ஜனாதிபதி உள்ளிட்ட பிரமுகர்கள் அஞ்சலித்தவுள்ளனர்-

உயிரிழந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று முற்பகல் 10.15 முதல் 11.30 வரையில் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த விரும்பும் சகல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்துடன் இணைந்த திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களும் இன்று முற்பகல் 10.15 மணியளவில் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று பாராளுமன்றத்தில் ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்பட்ட பின்னர் கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான காரியாலயமாக சௌமிய பவனில் வைக்கப்படவுள்ளது.

இதனையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பிலிருந்து கம்பளை வந்தடைந்து புஸ்ஸலாவை வழியாக ரம்பொடை வேவன்டன் இல்லத்தில் வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி பூதவுடல் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி பிற்பகல் 1.30 அளவில் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 4 மணியளவில் நோர்வூட் சௌமிய மூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இறுதி கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post