அச்சுறுத்திய பொலிஸ், இராணுவம் மீது சட்ட நடவடிக்கை!! -எடுப்போம் என்கிறார் கஜேந்திரகுமார்- - Yarl Thinakkural

அச்சுறுத்திய பொலிஸ், இராணுவம் மீது சட்ட நடவடிக்கை!! -எடுப்போம் என்கிறார் கஜேந்திரகுமார்-

தமிழீழ விடுவித்தலைப் புலிகளை எவ்வாறு 2009 ஆம் ஆண்டு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அளித்து விட வேண்டும் என சிங்கள பேரினவாத சக்திகளும் சில தமிழ் அரசியல சக்திகளும் பலமாக செயற்பட்டு வருகின்றன என அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் இன்றுவரை நாம் சோரம் போகாமல் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாலும் எம்மை விலை கொடுத்து வாங்க முடியாது என்பதாலும் எமக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு எம்மை அழிக்கத் துடிக்கின்றனர்.

அதற்காகச் சட்டத்தைப் புறம்பாகப் பாவிக்கின்றனர். எனினும் எமது பயணம் ஓயாது.நாம் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைப் பலரும் பல இடங்களில் நினைவு கூர்ந்தனர். எனினும் எமது கட்சியையும் எமது உறுப்பினர்களையும் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி அரசு அரசியல் பின்னோக்கத்துக்காகவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. மேலும் எமது கடசியின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மீது இராணுவத்தினரும் பொலிஸாரும் பல வழிகளில் அச்சுறுத்தல்களை பிரயோகித்துள்ளனர்.

சிலர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெண் உறுப்பினர்களை இராணுவத்தின் ஊடாகச் சுடுவோம் எனவும் பொலிஸார் மிரட்டியுள்ளனர்.

எனவே எமது உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல்களை மேற்கொண்ட இராணுவம் பொலிஸார் மீது தனித்தனியே சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றோம். மிக விரைவில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.
Previous Post Next Post