வடமராட்சி தாக்குதல்: இராணுவம் தண்டிக்கப்பட வேண்டும்!! -மணிவண்ணன் வலியுறுத்தல்- - Yarl Thinakkural

வடமராட்சி தாக்குதல்: இராணுவம் தண்டிக்கப்பட வேண்டும்!! -மணிவண்ணன் வலியுறுத்தல்-

வடமராட்சியில் மக்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதலை நடத்திய இராணுவம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய உடனடி சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியில் நேற்று இரவு வீடு புகுந்த இராணுவம் தாக்குதல் நடத்திய இடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இராணுவத்தின் மிலேச்சத்தனமாக தாக்குதல் சம்பவம் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தாக்குதல் சம்பவத்தோடு தொர்புடைய இராணுவத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழர் தாயகத்தில் உள்ள இராணுவம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாகும். தமிழ் இன அழிப்பை செய்த இந்த இராணுவம் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். இவ்விடயத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றது.

குடும்பப் பெண்ணை தாக்கும் அளவிற்கு குரோத குணம் கொண்ட இராணுவம் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக எமது கட்சி இருக்கும் அதே வேளை இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடி சட்ட நடவக்கைகள் எடுக்கவும் முனைந்துள்ளோம் என்றார்.
Previous Post Next Post