மே-11 முதல் நாடு முழுவதும் வழமைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது நாட்டை ஆபத்துக்குள் தள்ளிவிடலாம் என்று மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது அரசு நாட்டை வழமைக்கு கொண்டுவருவதன் பின்னணி பொதுத் தோ்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு என்றும் தோ்தலுக்காக மக்களை பலிக்கடாவாக்க முடியாதென்றும் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டுவருகின்றன.
ஆயினும் பாராளுமன்ற தோ்தலை ஒத்திவைப்பதால் அரசாங்கத்துக்கு பாரிய சட்டச்சிக்கல்களும் சவால்களையும் ஏற்படுத்தும் என்பதால் விரைவில் பொதுத் தோ்தலை நடத்தி முடிப்பதே பொருத்தமானது என்ற தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்திருப்பதாகவே தென்படுகின்றது.
இன்னும் தோ்தலை காலம் கடத்துவது ஆளும் அரசாங்கத்துக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்து அரசாங்கத்தரப்பில் காணப்படுகின்றது.
ஏன்எனில் தற்போதய கொரோனா நெருக்கடியால் தொடரும் பொருளாதார நெருக்கடிகள் காலப்போக்கில் அரசுக்கு பெரும் சுமையினை ஏற்படுத்தும் என்பதுடன் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்கட்சிகள் அவற்றை பிரசாரப் பொருளாக்கிவிடும் நிலை அரசுக்கு பின்னடைவை கொடுக்கும் என்பதாலேயே தோ்தலில் அவசரம் காட்டுவதாக அரசியல் அவதானிகள் தொிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு இவ்வாறு காணப்படும் நிலையில் வைரசினை கண்டுபிடித்து கட்டுப்படுத்துவதற்கான போதிய சோதனை நடவடிக்கைகள் இலங்கையில் இல்லாதது குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
போதியளவு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை ஆபத்தான அறிகுறியெனவும் இலங்கையில் இதுவரை 25,000 மருத்துவப் சோதனைகளே இடம்பபெற்றுள்ள நிலையில் கொரோனா அறிகுறிகளை வௌிப்படுத்தாமல் பலர் சமூகத்திற்குள் இருக்கும் நிலை இலங்கையினை நிர்மூலமாக்கிவிடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அரசு தோ்தலை மையமாக வைத்து நாட்டினை வழமைக்கு கொண்டுவரும் பட்சத்தில் கொரோனா தொற்று பரவல் சமூக மட்டத்தில் பரவுமாயின் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதுடன் அது அரசாங்கத்துக்கு பெரும் சவால்களை ஏற்படுத்திவிடும்.
நாட்டில் நேற்று வரை 804 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் நாளாந்தம் சராசரியாக 10 தொற்றாளர்களாவது கண்டறியப்படும் நிலையில் இதன் வீதம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மேலெழுந்து வருகின்றது.
இந்நிலையில் நாடு வழமைக்கு வரும் பட்சத்தில் மக்கள் விழிப்பாக கொரோனா தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாப்பதற்கான சுயமான நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது.
சமூக இடைவௌிகளை தொடர்ந்து பேணுவதுடன் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுவதிலிருந்து மக்கள் எப்போதும் பின்வாங்கக்கூடாது.
ஜெ-ஜெ