அரச பாடசாலைகளை முதலில் திறக்க திட்டம்!! -4 கட்டங்களாக மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை- - Yarl Thinakkural

அரச பாடசாலைகளை முதலில் திறக்க திட்டம்!! -4 கட்டங்களாக மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை-

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருக்கின்ற அரச பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்காக நான்கு கட்டத்திட்டமொன்று தீட்டப்பட்டு அது கல்வியமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்தா அண்மையில் கிழக்கிற்கு விஜயம்செய்து கலந்துரையாடல் மேற்கொண்டபோது பாடசாலைகளை திறப்பதுதொடர்பில் மாகாணத்திற்கென வேலைத்திட்டமொன்றை வரைந்து அனுப்புமாறு கேட்டிருந்தார்.
அதற்கமைவாக இந்த நான்கு கட்டத் திட்டத்தை வகுத்து கல்வியமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக அதாவது பாடசாலை திறக்கப்பட்ட முதல் வாரத்தில் மாணவர் வரவேண்டிய அவசியமில்லை. மாறாக அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலை அபிவிருத்திச்சபையினர் பழையமாணவர்சங்கத்தினர் ஆகிய தரப்பினர் பாடசாலைக்கு வருகைதந்து கலந்துரையால்களில் ஈடுபடவேண்டும். சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெறுதல்.

பாடசாலையை சுத்தம் செய்வது எவ்வாறு? மாணவர்களை படிப்படியாக உள்வாங்குகையில் எவ்வாறு செயற்படுவது? என்னென்ன முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்? என்பது பற்றி கலந்துரையாடி திட்டமிடலை மேற்கொள்ளவேண்டும்.
வகுப்பறைகள் கழிவறைகள் கட்டடங்கள் பொதுமண்டபங்கள் உள்ளிட்ட முழுப்பாடசாலையையும் சுத்தப்படுத்துதல் என்பதும் அதே முதல் வாரத்தில் செய்யப்படவேண்டும். இது கொரோனா மட்டுமன்றி டெங்குத்தடுப்புக்கும் உதவும்.

இரண்டாம் கட்டமாக அதாவது இரண்டாம் வாரத்தில் முதல்முதலாக க.பொ.த. உயர்தர மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு வரவழைத்தல். சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி அவர்களுக்கு ஒரு நாளில் ஒன்றரை மணிநேரம் ஒரு பாடம் என்ற அடிப்படையில் தினமொன்றுக்கு 3பாடங்கள் நடாத்தப்படல்வேண்டும்.

இருபாடங்கள் முடிய ஒரு இடைவேளை வழங்கப்படும்.
மூன்றாம் கட்டமாக அதாவது மூன்றாம் வாரம் க.பொ.த. சாதாரணதர மாணவர்களை வரவழைத்தல்.அவர்களுக்கான நேரசூசி வழங்கப்பட்டு சுகாதாரநடைமுறைகளைப் பேணுவதனூடாக படிப்படியாக கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளுதல்.

நான்காம் கட்டமாக அதாவது நான்காம் வாரத்தில் எவ்வாறு ஏனைய வகுப்புகளை தொடங்குவது தொடர்பில் மாகாணமட்ட கொரோனா கல்விக்குழு எடுக்கின்ற தீர்மானத்திற்கமைவாக நடைமுறைப்படுத்தப்படும்.
Previous Post Next Post