நிவாரணம் வழங்கலில் நெரிசல்!! -3 பெண்கள் பலி: 4 பேர் படுகாயம்- - Yarl Thinakkural

நிவாரணம் வழங்கலில் நெரிசல்!! -3 பெண்கள் பலி: 4 பேர் படுகாயம்-

கொழும்பு, மாளிகாவத்தையில் இன்று நண்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள வீடொன்றில் வைத்து நிவாரணமாக பொருட்களையும், பணத்தை விநியோகம் செய்த போதே அதனைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்துச் சென்ற போது ஏற்பட்ட சன நெரிசலிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகில் வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. அங்கு 500 க்கும் அதிகமானவர்கள் நிவாரணத்தைப் பெறுவதற்காக கூடியபோது கடுமையான சனநெரிசல் ஏற்பட்டது. அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நெரிசலில் சிக்குண்டு 3 பெண்கள் மரணமடைய, 3 பெண்கள் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு பதற்ற நிலை காணப்படுகின்றது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Previous Post Next Post