27.04 2020 மக்கள் மத்தியில் நடமாடும் அறிகுறியற்ற நோய் காவிகள் -சமூக இடைவெளியே தப்பிக்க வழி- - Yarl Thinakkural

27.04 2020 மக்கள் மத்தியில் நடமாடும் அறிகுறியற்ற நோய் காவிகள் -சமூக இடைவெளியே தப்பிக்க வழி-

27.04 2020 மக்கள் மத்தியில் நடமாடும் அறிகுறியற்ற நோய் காவிகள் -சமூக இடைவெளியே தப்பிக்க வழி-
27.04 2020 மக்கள் மத்தியில் நடமாடும் அறிகுறியற்ற நோய் காவிகள் -சமூக இடைவெளியே தப்பிக்க வழி-
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா பாதுகாப்பான வலயங்கள் சுருங்கிச் செல்கின்றன. மெல்ல மெல்ல அத்தனை மாவட்டங்களையும் ஆக்கிரமித்து விடுமோ என்ற அச்சம் மக்களை பயப் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படும் ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கில் மக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நிலையில் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50,000 ஆயிரத்தை கடந்து மிரட்டுகின்றது.

இவர்கள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதே பொருத்தமானதாக அமையும் என்ற நிலையில் அத்தனை பேருக்கும் மருத்துவப் பரிசோதனைகளை எப்போது செய்து முடிக்கப் போகின்றனர் என்பது கேள்விக்குரியதே.

இலங்கையில் தற்போது அரசினால் 1000 வரையான மருத்துவப் பரிசோதனைகளும் தனியாரினால் 400 வரையான மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுவரும் நிலையில் இவற்றை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலே இதில் வெற்றி காணமுடியும்.

இலங்கையில் தற்போது இனம் காணப்பட்ட பலர் மூன்றாம் நிலை தொற்றாளர்களாக உள்ள நிலையில் முதல் நிலை தொற்றாளர்கள், அவர்களுடன் பழகிய பலர் நோய் காவியாக சமூகத்தில் நடமாடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
இவற்றுக்கு மேலாக நோய் அறிகுறிகள் இல்லாத நோய் காவிகள் சமூகத்தில் நடமாடி வருவதாகவும் அந்த நோய் காவிகளிடம் மக்கள் சிக்காமல் இருக்க வேண்டும் எனவும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டாரவின் கருத்துக்கள் கனதிமிக்கவை.

இலங்கையில் இனம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் 80 வீதத்துக்கு அதிகமானவர்கள் பி.சீ.ஆர் மருத்துவப் பரிசோதனைகளின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் அவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த சாதாரண அறிகுறிகளும் காணப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலை நோய் அறிகுறிகள் இல்லாத நோய் காவிகள் பலர் சமூகத்தில் நடமாடுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதையே உறுதிசெய்கின்றன.
அவ்வாறானவர்கள் தமக்கு தொற்று இருப்பது தெரியாமல் பலருக்கு தொற்றை பரப்பிவிடும் அபாயம் காணப்படுகின்றது. இவற்றிலிருந்து மீள்வதற்கு சுகாதாரத்துறையினர் எடுக்கப்போகும் பொறிமுறையிலேயே கொரோனா தாக்கம் அடுத்த கட்டத்துக்குள் நகராது தடுப்பதற்கு இருக்கும் ஒரேவழி.
இவ்வாறான நிலையில் மக்கள் தம்மை தற்காத்துக்கொள்ள சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீட்டிலும் வெளியிலும் சமூக இடைவெளிகளை பேணி சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணுவதே இனம் காணப்படாத நோய் காவிகளிடம் சிக்காமல் இருப்பதற்கான ஒரேவழி.
ஜெ-ஜெ


Previous Post Next Post