20ம் திகதி தேர்தலை நடத்த முடியாது!! -நீதிமன்றில் ஆணைக்குழு சார்பில் எடுத்துரைப்பு- - Yarl Thinakkural

20ம் திகதி தேர்தலை நடத்த முடியாது!! -நீதிமன்றில் ஆணைக்குழு சார்பில் எடுத்துரைப்பு-

நாட்டில் தற்போது எழுந்துள்ள கொரோனா தொற்றுத் தொடர்பான இடர்காலப்பகுதியில் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளதாக, ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 25ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி, சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளை அடிப்படையாக வைத்தே ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையிலும் ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாதென பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
Previous Post Next Post