கொரோனா தொற்று: 2 மாத்தில் கட்டுப்படுத்தினோம்!! -சவேந்திர சில்வா பெருமிதம்- - Yarl Thinakkural

கொரோனா தொற்று: 2 மாத்தில் கட்டுப்படுத்தினோம்!! -சவேந்திர சில்வா பெருமிதம்-

இலங்கையில் இரண்டு மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியுள்ளோம் என்று கொரோனா ஒழிப்பு செயலணிய் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பெருமிதம் கொண்டுள்ளார்.

இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிபிசி ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்கானலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டால், சமய நிகழ்வொன்றில் பங்கேற்ற சிலர் அடையாளம் காணப்பட்ட போதிலும், அவர்கள் கண்காணிப்பு நிலையங்களுக்கு உட்படுத்தப்பட்டு முப்படையினர் மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழர் அதிகளவில் வாழும் பகுதிகளில் சமூகத்திற்குள் இருந்து ஒரு கொரோனா தொற்றாளரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு முப்படையினர் தமிழர்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டதாகவும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

அத்துடன், இரண்டு மாதம் என்ற மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் கோவிட் தொற்றை இலங்கையில் கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்கள் ஒழுக்கத்துடனும், சமூக இடைவெளியை பேணியும், சுகாதார பிரிவின் ஆலோசனைகளை பின்பற்றியும் நடந்துக்கொண்டால் கோவிட் தொற்றை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து முதற்கட்டமாக மாணவர்களே அழைத்து வரப்படுவதாகவும், அவர்களை தொடர்ந்தே ஏனையோரை அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட 5532 பேர், 41 கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Previous Post Next Post