12.05.2020 கொரோனா தந்த தாக்கம் தனியார் பணி யாளர்கள்;வேலையிழக்கும் பரிதாபம் - Yarl Thinakkural

12.05.2020 கொரோனா தந்த தாக்கம் தனியார் பணி யாளர்கள்;வேலையிழக்கும் பரிதாபம்


கொரோனா தாக்கம் நாடுமுழுவதும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றபோதும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று முதல் நாடு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனாலும் மக்கள் நடமாடுவதற்கு அடையாள அட்டை நடைமுறை கடுமையாக பின்பற்றப்படுகின்றது. இதனூடாக மக்களின் நடமாட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியுமாயினும் சமூகத்தில் தொற்று காணப்படாத வரையிலுமே இப் பொறிமுறை பாதுகாப்பானது.
இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாட்டை வழமை நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும் அதற்கான சரியான திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
இக் குற்றச்சாட்டில் உரிய திட்டங்கள் இன்றி நாட்டை திறப்பதன் மூலம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறது.
இந் நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் நாட்டிற்குள் மேலும் பரவும் ஆபத்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் பொது மக்கள் தமது பாதுகாப்பு குறித்து கரிசனையோடு செயற்படுவது முக்கியமானது.
நாடு இயல்பு நிலைக்கு கொண்டு வந்தமைக்கான காரணத்தை புரிந்து அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்தல் வேண்டும். அவற்றுக்கப்பால் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுதல் அவசியம்.
இவ்வாறான நிலையில் நாளாந்த தொழிலாளர்கள் நாடு வழமைக்கு வந்த நிலையிலும் தொழில் இழந்தவர்களாகவே காணப்படுகின்றமை வேதனைக்குரியது. இவ்வாறானவர்களின் வருமான இழப்புக் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்.
நாட்டில் கொரோனா தாக்கத்தால் அத்தனை தொழிற்றுறைகளும் முடக்கப்பட்ட நிலையில் பல நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை பகுதியளவிலோ முழுமையாகவோ கைவிடப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்புக்குள்ளாகும் அபாயத்தை தோற்றுவித்திருக்கிறது.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் தனியார் நிறுவனங்களில் பணி ஆட்குறைப்புச் செய்யக் கூடாது என்று பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தாலும் கொரோனா தாக்கம் தனியார் அமைப்புக்களை விரும்பியோ விரும்பாமலோ தமது நிறுவனங்களை தக்கவைப்பதற்காக பணியாளர்களை குறைப்புச் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையால் பல ஆயிரக்கனக்கானோர் வேலை இழக்கும் சந்தர்பத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதார ரீதியாக போராடும் நிலைக்குத் தள்ளப்படுவர்.
இவ்வாறான நிலையினை கருத்தில் கொண்டு அரசாங்கம் வேகமாக தனியார் தொழிற்றுறை பணியாளர்களை பாதுகாப்பதற்கான பொறிமுறை ஒன்றினை அறிமுகம் செய்வதே பொருத்தமானது.
ஜெ-ஜெ
Previous Post Next Post