ஊடரங்கின் போது மக்கள் மீது தாக்குதல்!! -பொலிஸ், இராணுவத்திற்கு எதிராக 11 முறைப்பாடுகள்- - Yarl Thinakkural

ஊடரங்கின் போது மக்கள் மீது தாக்குதல்!! -பொலிஸ், இராணுவத்திற்கு எதிராக 11 முறைப்பாடுகள்-

யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது பொலிஸ் மற்றும் இராணுவம் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் நாட்டில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன் போது பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியில் இருந்து இன்றுவரையான காலப்பகுதியிலேயே குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 9 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராவை. கோப்பாய், சாவகச்சேரி வட்டுக்கோட்டை மற்றும் பருத்தித்துறை பொலிஸாருக்கு எதிராகவே முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மேலும் இராணுவத்துக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை ஆனையிறவு இராணுவ சோதனை சாவடி படையினர் தொடர்பாகவும் மற்றையது பூநகரி பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கிடைக்கப் பெற்றுள்ளன.

பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளன என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் மேலும் தகவல் தெரிவித்தார்.
Previous Post Next Post