09.05.2020 கொரோனா தாக்கத்துக்குள் எகிறும் குடும்ப வன்முறைகள் - Yarl Thinakkural

09.05.2020 கொரோனா தாக்கத்துக்குள் எகிறும் குடும்ப வன்முறைகள்


கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், குடும்ப வன்முறைகள் உலகலாவிய ரீதியில் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் வௌிப்படுத்தப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஈடாடச் செய்திருக்கும் நிலையில் பல கோடி போ் வேலை இழப்புக்குள்ளாகும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.
இவ்வாறான நிலையில் கொரோனா தாக்கத்தால் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் மக்கள் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். இவற்றுள் நாளாந்த வருமானத்தை நம்பிவாழும் மக்கள் பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.
இவ்வாறானவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் இக் குடும்பங்களில் வறுமை மற்றும் குடும்ப வன்முறைகள் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீண்ட காலம் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதால் கருத்து முரண்பாடுகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் வௌிப்படுத்துகின்றன.
இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதால், பெண்கள் பாதுகாப்புக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு ரூவிற்றர் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளமை நோக்கப்படவேண்டியது.
அந்த ரூவிற்றர் பதிவில்  கொரோனா வைரசை தடுப்பதற்கு ஊரடங்கும், தனிமைப்படுத்தலும் அவசியம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த காலகட்டத்தில் பெண்களும், பெண் பிள்ளைகளும் வீடுகளில் இருப்பவர்களால் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.
கடந்த சில வாரங்களாக, பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. பயமும் வளர்ந்து இருக்கிறது. உலகளவில், குடும்ப வன்முறைகள் பெருகி வருவதை நாங்கள் பார்க்க முடிகிறது. என்று வேதனை வௌியிட்டுள்ளார்.
இதற்கப்பால் சர்வதேச வணிக நாளிதழான பைனான்சியல் டைம்ஸ் நாளிதழ், கடந்த சனிக்கிழமை வௌியிட்டுள்ள  ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலம் தொட்டு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பெருகி உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் இலங்கையிலும் குடும்ப வன்முறைகள், சமூக வன்முறைகள் அதிகரித்து வருகின்றமை குறித்து கவலைகள் வௌியிடப்பட்டுள்ளன.
பொருளாதார இழப்பு, வறுமை, தொழிலிழப்பு என்பன பாரிய மன உளைச்சலுக்குள் பல இலட்சம் பேரை தள்ளியிருப்பது ஆபத்தான அறிகுறியே.
இவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்க பொருத்தமான பொறிமுறைகள் விரைந்து உருவாக்கப்படுவது அவசியம். மேலும் கொரோனாவின் தாக்கம் தொடரும் பட்சத்தில் அரசுக்கு பாரிய சவால் காத்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஜெ-ஜெ
Previous Post Next Post