07.05.2020 சமூகத் தொற்றாளர் குறித்து மக்களுக்கு அவதானம் தேவை - Yarl Thinakkural

07.05.2020 சமூகத் தொற்றாளர் குறித்து மக்களுக்கு அவதானம் தேவை


இலங்கையில் கொரோனா தாக்கம் குறித்த கவலைகள் சுகாதாரத்துறையினரை கவலையடையச் செய்திருக்கிறது. தொற்றுப் பரவல் நிலை சமூக மட்டத்துக்கு பரவிவிடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

இதற்குள் கொரோனா நோய் அறிகுறிகள் தென்படாத 80 வீதமான நோயாளிகள் சமூகத்தில் ஆங்காங்கே இருக்கலாம் என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர ஜயருவான் பண்டார எச்சரித்துள்ளமை மருத்துவத்துறையினையும் மக்களையும் மேலும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.அதற்கப்பால் இலங்கையில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் அபாயத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

அவர் தனது எச்சரிக்கையில் சமூகத்தில் அறிகுறியில்லாத 80 வீதமானவர்கள் இருக்கலாம் என்றும் இதனால் இந்த நபர்கள் தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் நோயாளிகள் மீண்டும் பெருக கூடும் என்றும்; கூறியுள்ளார். கொரோனா நோயாளிகளில் 20 வீதமானோருக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படுவதில்லை எனவும் 60 வீதமான நோயாளர்களுக்கு குறைந்தளவிலேயே நோய் அறிகுறிகள் தென்படுவதாகவும்  இதனால் இவர்கள் மிகப் பெரிய நோய் காவிகளாக மாறக்கூடும்.

இவர்கள் தொடர்பாகவே கூடுதலாக கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வேலைகளுக்கு சென்று வரும் நபர்கள் மூலம் வீட்டுகளுக்குள் கொரோனா வைரஸ் பரவக் கூடும் என்பதே தற்போதுள்ள பெரிய பிரச்சினை என்று சுட்டிக்காட்டியிருப்பது நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடலாம் என்பதையே புலப்படுத்துகின்றது.

இந்த நிலைமையில் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க கட்டாயம் சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பேணுவதில் இருந்து தவறினால் அது அவர்களுக்கு ஆபத்தாகவே முடிந்துவிடும்.

குறிப்பாக வீட்டிலிருந்து நாளும் வெளியில் சென்று வருபவர்கள் மற்றும் நாளந்தம் தொழில்களுக்கு செல்லும்; நபர்கள் கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும்.

நேற்றுடன் 800 நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை கொரோனா தாக்கம் இலங்கையில் அதிகரித்து செல்லப்போவதையே எடுத்துக் காட்டுகின்றது.

நாட்டில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும் மக்கள் தங்களையும் தாங்கள் சார்ந்த குடும்பம் சமூகத்தையும் பாதுகாக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வோடு அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டியது கட்டாயமானது.

மேலும் சில காலம் ஊரடங்கு உத்தரவு ஊடாக நாட்டை முடக்குவதே கொரோனாவை முற்றாக ஒழிக்க தற்போது இருக்கும் ஒரே வழி என்பதே சுகாதார துறைசார்ந்தவர்கள் பலரின் கருத்தாக காணப்படும் நிலையில் மறுபுறம் நாடு பொருளாதாரத்தில் பாரிய சரிவை கண்டு வருகின்றமை நாட்டை தொடர்ந்து முடக்கமுடியாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இவ்வாறான நிலையில் கொரோனா என்ற பேரரக்கனை இல்லாதொழிப்பது மக்களின் நடைமுறையிலேயே தங்கியிருக்கிறது.
ஜெ-ஜெ
Previous Post Next Post