06.05.2020 கொரோனா ஆபத்துக்குள் பொதுத் தேர்தலா? மக்களா? - Yarl Thinakkural

06.05.2020 கொரோனா ஆபத்துக்குள் பொதுத் தேர்தலா? மக்களா?

06.05.2020கொரோனா ஆபத்துக்குள்   பொதுத் தேர்தலா? மக்களா?
06.05.2020கொரோனா ஆபத்துக்குள்   பொதுத் தேர்தலா? மக்களா?

இலங்கையில் கொரோனா தாக்கம் கட்டுமீறிப்போகின்றது. நாளாந்தம் தொற்றாளர் தொகை ஏறுமுகம் கண்டுவருகின்றது. கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கலாம் என்பதாகவே சுகாதார துறையின் அறிவுறுத்தல்கள் காணபட்டாலும் மறுபுறத்தில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் முன்னகர்கிறது.

இதற்கப்பால் நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலைக்கு தள்ளியமை ஆளும் அரசாங்கத்துக்கு பின்னகர்வாகவே நோக்கப்பட்டது.

இருப்பினும் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துவரும் நிலையில் அதனை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்ச்சிப்பதோடு சட்டரீதியாக தேர்தலை நிறுத்துவதற்கான முன்னகர்வுகளில் எதிர்கட்சிகள் ஈடுபடுகின்றன. அரசாங்கமோ தேர்தலை யூன் 20 நடத்துவதென்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாகவே தென்படுகின்றது.

கொரோனா தாக்கத்துக்குள் ஆளும் அரசு தேர்தலை நடத்துவதிலும் எதிர்த்தரப்பினர் மீள பாராளுமன்றை கூட்ட வேண்டும் என்ற இழுபறி தொடர்வது மக்களை விசனமடையச் செய்திருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் கொரோனா முற்றாக ஒழிக்கப்படும் வரை தேர்தலை வைப்பதோ நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதோ பொருத்தமானதாக அமையாது என்பதே சுகாதாரத்துறையினரது கருத்தாக இருக்கும் நிலையில் தேர்தலை சமூக இடைவெளியை பேணி தேர்தலை நடத்த முடியும் என்பதில் அரசு கவனம் செலுத்துகின்றது.

இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழு விடுமுறை தினத்தில் வேட்புமனுக்களை ஏற்றுக் கொண்டமை சட்டத்திற்கு புறம்பான விடயம் என்ற வாதம் இப்போது தலைதூக்கியிருப்பது தேர்தல் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்ல தேர்தல் இன்னும் சில காலத்துக்கு பின்செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் தொடர்பில் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு மக்களை கோபம் கொள்ள வைத்திருப்பது மட்டுமல்ல தேர்தல் தொடர்பில் அக்கறையின்மையை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை.

இந்நிலையில் தேர்தலா மக்களின் பாதுகாப்பா என்ற இரு முனைகளில் அரசாங்கம் செயற்பட வேண்டிய இக்கட்டான நிலையில் அடுத்துவரும் வாரங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கமாயின் தேர்தல் தொடர்பில் பல்வேறு சிக்கல்களுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இன்று கொரோனா தாக்கம் இலங்கையில் அதிகரிக்கும் போக்கே காணப்படுவதால் மக்களின் பாதுகாப்டபை உறுதிப்படுத்தியதன் பின்னர் தேர்தலுக்கு செல்வதே பொருத்தமானது என்ற கருத்து மேலோங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

ஜெ-ஜெ
Previous Post Next Post