05.05.2020 கொரோனா அச்சத்திற்குள் இயல்பு நிலை சாத்தியமா? - Yarl Thinakkural

05.05.2020 கொரோனா அச்சத்திற்குள் இயல்பு நிலை சாத்தியமா?

05.05.2020 கொரோனா அச்சத்திற்குள்  இயல்பு நிலை சாத்தியமா?
05.05.2020 கொரோனா அச்சத்திற்குள்  இயல்பு நிலை சாத்தியமா?

இலங்கையில் கொரோனாத் தாக்கம் சற்றுத் தணிந்து செல்வது போல் தெரிந்தாலும் உண்மையில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை என்பதையே புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
இதற்கப்பால் சுகாதாரத்துறையினரது அவதானமும் நாட்டினை அவசரப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வருவதால் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமலில்லை.
நேற்று வரை நாட்டில் கொரோனாவின் தாக்கத்துக் குள்ளானோர் தொகை 751 எட்டியிருக்கிறது. அதேவேளை நேற்றைய தினத்தில் மட்டும் 33 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில் குறித்த தொற்றாளர்கள் அனைவருமே தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்பது மட்டுமே திருப்தியடையக்கூடிய விடயம்.
இலங்கையில் ஒரு வகையில் சமூகத்திலிருந்து தொற்றும் நிலை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தென்பட்டாலும் அவை உறுதிசெய்ய முடியாத தகவலே. ஏன் எனில் இதுவரை கொரோனாவால் கண்டறியப்பட்டவர்கள் அத்தனை பேருமே கொரோனாவுக்கான அறிகுறிகள் இல்லாத நிலையில் மருத்துவப் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள்.
இவ்வாறான நிலையில் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாத பலர் சமூகத்தில் இருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகின்றது.
இதன் காரணமாகவே ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் சமூக இடைவெளிகளை பேணுவது முதல் சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு அரசும் சுகாதாரத்துறையினரும் அறிவுறுத்துகின்றனர் என்பதே உண்மை.
இதற்கப்பால் கொரோனா தாக்கத்துக்குள்ளானோர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளான சம்பவங்கள் பதிவாகியமை கொரோனா தொடர்பான அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
இவ்வாறான நிலையில் நாட்டை எதிர்வரும் 11 ஆம் திகதி முழுமையாக இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான முனைப்புக்கள் இடம்பெறுகின்றன.
நாட்டின் பொருளாதாரம், தொழிற்றுறைகள், நாளாந்த உழைப்பாளர்வர்க்கம், மக்களுக்கான அரச சேவைகள் என அனைத்தும் முடங்கிய நிலையில் அவற்றை மீளமைக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றமை மறுக்கமுடியாதது.
ஆனாலும் நாட்டிலிருந்து கொரோனா தொற்று முற்றாக ஒழிக்கப்படும் வரை அதன் அச்சம் தொடர்ந்து கொண்டே இருக்கப்போகின்றது. 
ஆகையால் மக்கள் நாடு இயல்பு நிலைக்கு வரினும் அவற்றை சரியாகப் பயன்படுத்தி அத்தியவசிய தேவைகள், வேலைகள் என்பவற்றை தவிர வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதோடு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேண முன்வரவேண்டும்.     
ஜெ-ஜெ

Previous Post Next Post