04.05.2020 ஊரடங்கு தளர்வை மக்கள் பொறுப்புடன் பின்பற்றுவோம் - Yarl Thinakkural

04.05.2020 ஊரடங்கு தளர்வை மக்கள் பொறுப்புடன் பின்பற்றுவோம்

04.05.2020 ஊரடங்கு தளர்வை மக்கள்  பொறுப்புடன் பின்பற்றுவோம்
இலங்கையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற போதும் சமூகத்திலிருந்து தொற்றாத நிலை சற்று அமைதியடையக் கூடிய நிலைதான்.

ஆயினும் கொரோனாவின் தாக்கம் இலங்கையை விட்டு அகலும் வரை மக்கள் விழிப்புணர்வோடு சமூக இடைவெளிகளை பேணுவது மட்டுமல்ல சுகாதார நடைமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றுவது தவிர்க்க முடியாதது.

இந்நிலையில் இன்று ஊரடங்கு தளர்த்தப்படும் போதும் மக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மதித்து நடப்பது கட்டாயமானது. ஊரடங்குத் தளர்வில் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பது மக்கள் தம்மை பாதுகாப்பதற்கு இருக்கும் சுலபமான வழி.

வைத்தியசாலை மற்றும் அத்தியவசிய தேவைகளை தவிர வேறு தேவைகளுக்கு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
நாட்டின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு எழுந்திருக்கிறது. மறுபுறம் 100,000 வரையான தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு விரைந்து பரிசோதனைகளை செய்யவேண்டிய தேவை என பல்வேறு நெருக்கடிக்குள்ளும்  ஊரடங்கினை தளர்த்தியுள்ளது.

ஊரடங்கு தளர்வினை முறையாக பின்பற்றத்தவறினால் கொரோனா தொற்று சமூகத்தில் மறைந்திருந்தால் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
பொது மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயமாக முகக் கவசத்தை அணிந்து செல்வது கட்டாயமானது. எங்கு சென்றாலும் கட்டாயமாக கைகளை உள்ளே செல்லும் போதும் வெளியே வரும் போதும் சுத்தமாக கழுவுங்கள். எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை பேணி தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு விழிப்போடு இருப்பது தம்மையும் தாம் சார்ந்த குடும்பத்தையும், சமூகத்தையும் பாதுகாப்பது அனைவரதும் சமூகக் கடமை என்று பொறுப்புணர்ந்து செயலாற்ற வேண்டும்.

இதற்கப்பால் வியாபார நிலையங்கள் தாமாக உணர்ந்து புகைப்பொருள் விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்வதே தற்போது அவர்கள் சமூகத்துக்கு ஆற்றும் பெரிய விடயம்.

அதேவேளை கொரோனா தாக்கம் நாட்டைவிட்டு ஒழிக்கப்படும் வரை மதுபானசாலைகளை மூடிவைப்பதே சமூகத்தில் ஏற்படும் வறுமையையும் குடும்ப, சமூக வன்முறைகளை கட்டுப்படுத்தவும் முடியும்.

குறித்த அதிகாரிகள் தற்போதய நிலையின் பாராதூரத்தன்மை அறிந்து மதுபான சாலைகளை இன்னும் சில காலமாவது மூடிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சுகாதாரத்துறையின் எதிர்பார்ப்பாகவுள்ளது. 

ஜெ-ஜெ
Previous Post Next Post