03.04.2020 அனைவருக்கும் கிடைக்கிறதா அரசின் இணைய வழி கல்வி - Yarl Thinakkural

03.04.2020 அனைவருக்கும் கிடைக்கிறதா அரசின் இணைய வழி கல்வி

03.04.2020 அனைவருக்கும் கிடைக்கிறதா  அரசின் இணைய வழி கல்வி

இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 700தொட்டிருக்கிறது தொற்றாளர் தொகை. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அரசு இறங்கியிருக்கின்றது.
இதற்கு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்விடும்என்பதோடு ஊரடங்கு நிலை நீடித்தால் பாரிய நெருக்கடிகளை நாடு எதிர்நோக்கும் என்பதால் இயல்பு நிலைக்கு வரவேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

இந்நிலையில் நாட்டின் அத்தனை துறைகளையும் ஆட்டிப்படைத்திருக்கும் கொரோனா தாக்கம் இலங்கையின் கல்வித்துறையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை.

கொரோனாவால் நாடு முழுவதும் முடங்கிப்போயுள்ள நிலையில் இலங்கை கல்வி அமைச்சு மாணவர்களுக்கான ஒன்லைன் ஊடாக இணைய வழி கல்வியை மேற்கொண்டு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆனாலும் குறித்த கல்வி வசதியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு சகல மாணவர்களுக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே. குறிப்பாக வட்சப், வைபர் ஊடாக ஆசிரியர்களால் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் செயலட்டைகள் பகிரப்பட்டு அவை மாணவர்களால் வீடுகளில் இருந்தே செய்விக்கப்படுகின்றன.

குறித்த சேவையினை பெற வசதியில்லாத மாணவர் வர்க்கம் பல ஆயிரக்கணக்கில் இருக்கின்றமை மறுக்க முடியாததே. இவ்வாறான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாதது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் குறித்த ஒன்லைன் கல்வி ஊட்டல்கள் இடம்பெற்றாலும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதன் பயனை அனுபவிக்க முடியாத நிலையிலுள்ளமை பரிதாபத்துக்குரியது.

அதற்கப்பால் இணையத்தளம் மற்றும் பைவர், வட்சப் ஊடாக மாணவர்கள் பாடசாலை விடுமுறையில் வீடுகளில் இருந்து பயிற்சியினை மேற்கொள்வதற்காக செயலட்டைகள் வழங்கப்படும் நிலையில் குறித்த செயலட்டைகள் ஒவ்வொரு பாடரீதியாக அமைவதால் ஒவ்வொரு பாடத்துக்கும் அவற்றை நிழல் பிரதி எடுப்பதற்கு நிறைய பணம் செலவாகும் நிலையில் அவற்றை அனைத்து மாணவர்களும் பெறுவதில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன.

இன்றைய அசாதாரண நிலையில் நாளாந்த தொழிலாளர்கள் முற்றாக வருமானத்தை இழந்து நிற்கும் தறுவாயில் குறித்த செயலட்டைகளை முழுமையாக பெறுவதில் மாணவர்கள் பெரும் இடர்பாடுகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.

சில நிதி வலுபடைத்த பாடசாலைகள் தாங்களாகவே இவற்றை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வினாப் பத்திரங்களாக பிரதியெடுத்து வழங்கும் நிலையில் சிறிய பாடசாலைகளாலும் பின்தங்கிய கிராமிய பாடசாலைகளாலும் இவற்றை வழங்க முடியாத நிலை தொடர்கின்றது.
இவ்வாறான நிலையினை நீக்கி மாணவர்கள் அனைவருக்கும்  குறித்த வினாப்பத்திரங்கள்,  செயலட்டைகள் கிடைப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. 

ஜெ-ஜெPrevious Post Next Post