01.05.2020 கொரோனா தாக்கம் தந்த துயரம் நிறைந்த மே-01 - Yarl Thinakkural

01.05.2020 கொரோனா தாக்கம் தந்த துயரம் நிறைந்த மே-01

01.05.2020 கொரோனா தாக்கம் தந்த  துயரம் நிறைந்த மே-01
இன்று சர்வதேச தொழிலாளர் தினம். தொழிலாளர்களின் உரிமைகள் பல்வேறு போராட்டங்களுக்கும் சவால்களுக்கும் பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட உயரிய நாள். உலகம் முழுவதும் தொழிலாளர் வெற்றித் தினமாக கொண்டாடி வரும் நாள்.

ஆனால் இவ்வாண்டு தொழிலாளர்களையே முடக்கி சோகத்தில் ஆழ்த்திப் பேரபாயத்தை தந்த நாளாக இன்றைய தினம் அமைந்து விட்டது.
உலகம் முழுவதிலும் பலகோடி தொழிலாளர்கள் தொழிலை இழக்கும் நிர்கதி நிலைக்குள் தள்ளியிருக்கிறது கொரோனா துயரம்.
இதற்கப்பால் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்களை கொரோனாவுக்கு பலியிடப்படுகின்ற நாளாக மாறி நாளாந்த வாழ்வாதாரத்துக்கே போராடும் நிலைக்கு தொழிலாளர் வர்க்கம் வந்திருக்கிறது.

வல்லாதிக்க அமெரிக்காவுக்கு எதிராக போராடி எட்டு மணி நேரம் வேலை உட்பட பல உரிமைகளை பெற்ற தொழிலாளர் வர்க்கம் இன்று வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் வறுமைக்குள் சிக்கிவிடும் அபாயத்தில் இருக்கின்றன.

கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை அதளபாதளாத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
பாரிய தொழில் துறைகள் கைவிடப்படும் நிலையில் பல கோடி தொழிலாளர்கள் தொழிலிழந்து பட்டினிச் சாவை எதிர்நோக்கும் அபாயக் கட்டத்தில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது பல நாடுகளும் திகைத்து நிற்கின்றன.

உலகம் முழுவதும் 30 இலட்சத்தை தாண்டி மிரட்டும் கொரோனா தாக்கம் 200000 நெருங்குகின்றது பலி எண்ணிக்கை. நெருக்கடியிலிருந்து மீண்டு விடுவதற்கான போராட்டத்தில் உலக நாடுகள் முயன்றாலும் அத்தனையையும் தாண்டி கொரோனா தாக்கம் நாளாந்தம் உச்சம் பெறுகின்றது.
இவ்வாறான நிலையில் இலங்கையிலும் கொரோனா தாக்கத்தால் அத்தனை தொழிற்றுறைகளும் முடங்கிய நிலையில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்குள்ளாகும் நிலை நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சிதைத்துவிடும் நிலைக்குத் தள்ளிவிடும்.

இவ்வாறான நிலையில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் கடந்த கால கொடிய யுத்தத்ததால் தமது தொழிலை இழந்து நீண்ட காலத்தின் பின்னர் மெல்ல மெல்ல புத்துயிர் பெற்று வந்த தொழிலாளர்களின் அத்தனை முயற்சிகளையும் கொரோனா தாக்கம் சிதைத்துவிட்ட நிலையில் இன்று அரசின் உதவிகளை நாளாந்த உணவுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளர்.

இந்நிலையில் கொரோனா தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசினதும் சுகாதாரத் துறையினதும் அறிவுறுத்தல்களை பின்பற்றி அடுத்துவரும் மே நாளை தொழிலாளர்களின் வாழ்வை வெளிச்சமாக்குவோம்.
ஜெ-ஜெ
Previous Post Next Post