ஊரடங்கிலும் மின், நீர் விநியோக பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு!! -சிறப்பு வேலைத்திட்டம்: தொடர்பு இலக்கங்களும் அறிவிப்பு- - Yarl Thinakkural

ஊரடங்கிலும் மின், நீர் விநியோக பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு!! -சிறப்பு வேலைத்திட்டம்: தொடர்பு இலக்கங்களும் அறிவிப்பு-

ஊரடங்கு அமுலில் உள்ள போதும் மின் மற்றும் நீர் பாவனையாளர்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சிறப்பு வேலைத்திட்டம் நடமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று பொது பண்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த ஆணைக்குழு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி சிறப்பு நடமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இ.பொ.ப.ஆ.) இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றுடன் இணைந்து நாளை முதல் விசேட வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட ஹொட்லைன் சேவையின் ஊடாக பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரச்சினைக்கு அமைய தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மின்னியலாளர் அல்லது குழாய் திருத்த பணியாளர் ஒருவரது உதவியை பாவனையாளர் நாடலாம்.

இதேவேளை சேவையை அதிகப்படுத்தும் வகையில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மின்னியலாளர்கள் மற்றும் குழாய் திருத்த பணியாளர்களின் விபரங்களை உள்ளடக்கிய தரவுத்தளம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இத்தகவல்களை பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்க இ.பொ.ப.ஆ ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க பதிவுசெய்யப்பட்ட மின்னியலாளர்கள் மற்றும் குழாய் திருத்த பணியாளர்களினால் இச்சேவை வழங்கப்படும்.

ஊரடங்கு உத்தரவு அமுலிலுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துரை மாவட்டங்களில் முதல் கட்டமாக விசேட சேவைக்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பாவனையாளர்களின் தேவைக்கேற்ப இவ்விசேட தொழில்நுட்ப உதவியை ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. தங்களது சேவைக்காக ஒரு நியாயமான கட்டணத்தை அறவிடுவதுடன், அதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய பற்றுச் சீட்டொன்றை பாவனையாளர்களுக்கு வழங்குமாறும் மின்னியலாளர்கள் மற்றும் குழாய் திருத்த பணியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

உங்கள் வீடுகளிலுள்ள குழாய் நீர் அமைப்பில் ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின் 1939 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக குழாய் திருத்த பணியாளர் ஒருவரது சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

இ.மி.ச.-யின் பாவனையாளராகிய உங்களின் வீட்டு மின் அமைப்பில் ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின் 1987 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக மின்னியலாளர் ஒருவரது சேவையை பெற்றுக் கொள்ளும் அதேவேளை, தனியார் மின்சார நிறுவனத்தின் (லெகோ) பாவனையாளர்கள் 1910 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் இச்சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

இச்சேவை தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 0764271030 என்ற இலக்கத்தின் ஊடாக இ.பொ.ப.ஆ தொடர்பு கொள்ளலாம்.

மின்னியலாளர்கள் மற்றும் குழாய் திருத்த பணியாளர்களின் சேவைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர், சேவை தொடர்பான கருத்துக்களை ஏற்கனவே குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பாவனையாளர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.

பாவனையாளர்களுக்கு தங்கள் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இ.பொ.ப.ஆ, இ.மி.ச, லெகோ மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து தீர்வினை வழங்கவுள்ளது.
Previous Post Next Post