ஊடரங்கில் இராணுவம் செய்யும் மக்கள் சேவை பாராட்டுக்குரியது!! -தொழிலதிபர் தியாகேந்திரன்- - Yarl Thinakkural

ஊடரங்கில் இராணுவம் செய்யும் மக்கள் சேவை பாராட்டுக்குரியது!! -தொழிலதிபர் தியாகேந்திரன்-

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மக்களுக்காக இராணுவம் செய்யும் சேவை பாராட்டப்பட வேண்டியது என்று தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகரும் தொழிலதிபருமான வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் மத்தியில் இன்று கருத்து தெரிவித்த அவர் பொலிஸாருடைய சேவையுடன் ஒப்பிடுகையில் இராணுவத்தின் சேவை பாராட்டக்கூடியது என்று மேலும் தெரிவித்திருந்தார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்கான போக்குவரத்து வசதி உட்பட உணவுப் பொருள்களை இலகுவாக வாங்குவதற்கான வசதிகளையும் இராணுவத்தினர் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

வடமாகாண மக்கள் இராணுவத்தினரை எதிரியாகத் தான் பார்த்தனர். இராணுவம் என்றால் ஒரு அச்ச உணர்வு இருந்தது.

ஆனால் இன்று கொரோனா அபாயம் இருக்கும் நிலையிலும் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசக் கூடாது என்ற போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் வயோதிபர்களை தமது கைகளால் தாங்கி பஸ்சில் ஏற்றுவதில் இருந்து இறக்குவது வரை இராணுவத்தினர் தமது உயிரையும் பாராது உதவி செய்து வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது என்றார்.
Previous Post Next Post