காணாமல் போன பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!! -தொண்டமனாறு கடலில் சம்பவம்- - Yarl Thinakkural

காணாமல் போன பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!! -தொண்டமனாறு கடலில் சம்பவம்-

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன், நேற்று மாலை முதல் காணாமற்போன நிலையில் இன்று அதிகாலை தொண்டமனாறு கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொண்டமனாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர்.

அதுதொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கினர். நேற்றிரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.

சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் அவரைத் தேடினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவர் தொண்டைமாறு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post Next Post